மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்துமாறும் சவால்
இடதுசாரிக் கொள்கைகளை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தற்போது புதிய தாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் இன்று (04) உரையாற்றிய அவர், அரசாங்கத்துக்குத் துணிவிருந்தால் மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்துமாறும் சவால் விடுத்தார்.
முன்னர் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் கொள்கைகளைப் போற்றியவர்கள், தற்போது ஆடம் ஸ்மித் போன்ற பொருளியலாளர்களின் கொள்கைகளைப் பின்பற்றுவதாக விமர்சித்த அவர், “இடதுபக்கம் சிக்னல் காட்டிவிட்டு வலதுபக்கம் செல்லும் அரசாங்கமாக இது மாறியுள்ளது” எனத் தெரிவித்தார்.
அஸ்வெசும திட்டத்தின் தரவுகள் குறித்து விமர்சனம்
வறுமையை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், அறிவியல் அடிப்படையற்ற தவறான தரவுகளைக் கொண்டு அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாக சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.
வறுமை ஒழிப்புத் திட்டமொன்றில் நுகர்வு, உற்பத்தி, சேமிப்பு, முதலீடு, ஏற்றுமதி ஆகிய அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்றும், அஸ்வெசும திட்டம் நுகர்வை மாத்திரமே மையப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
குடும்பங்களின் வருமானம் மற்றும் செலவினங்கள் தொடர்பான அண்மைய கணக்கெடுப்பை முழுமையாக முடிக்காமல், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எதிர்வரும் 12ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
நாட்டில் வறுமை 30 முதல் 40 சதவீதம் வரை காணப்படுவதாகக் கூறிய அவர், 18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் வேலையின்மை தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவித்தார். தொழிற்சாலைகள் மூடப்படுவதாலும் வேலைவாய்ப்புகள் இழக்கப்படுவதாலும் வறுமை அதிகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இலக்குகளை விஞ்சும் அளவுக்கு வரிச்சுமை”
சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் மக்கள்மீது அதிக வரிச்சுமையைச் சுமத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றஞ்சாட்டினார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதன்மை வரவு செலவு மிகை 2.3 சதவீதமாக இருக்க வேண்டும் என்ற இலக்கை, அரசாங்கம் 5.4 சதவீதம் வரை உயர்த்தியுள்ளதாக அவர் கூறினார். அரச வருமானத்திற்கான இலக்கு 13.9 சதவீதமாக இருந்த நிலையில், அதனை 15.4 சதவீதம் வரை எட்டுவதற்கும் வரிச்சுமை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் 12 இலட்சம் ரூபாவுக்கு விட்ஸ் ரகக் காரும், 50,000 ரூபாவுக்கு ஜப்பானிய மோட்டார் சைக்கிளும் பெற்றுக்கொடுக்கப்படும் எனக் கூறப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் விமர்சித்தார். இறக்குமதி விலைக்கே எரிபொருள் வழங்கப்படும் எனக் கூறியபோதிலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஜனநாயக உரிமைகள் குறித்துக் குற்றச்சாட்டு
நேரடி மற்றும் மறைமுக வரிகளால் மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளதாகக் கூறிய சஜித் பிரேமதாச, அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளைப் பாதிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டுவரப்படும் சட்ட ஏற்பாடுகள், அரசியல் எதிர்ப்பாளர்களையும் மாற்றுக் கருத்துடையவர்களையும் ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பயங்கரவாதி யார் என்பதை வரையறுக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படுவதாகக் கூறிய அவர், இத்தகைய ஏற்பாடுகள் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதிக்கும் என விமர்சித்தார்.
ஜனநாயக உரிமைகளை விரிவுபடுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தற்போது தனக்குக் கிடைத்த மக்களாணைக்கு முரணாகச் செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மின்சாரக் கட்டணம் தொடர்பிலும் விமர்சனம்
எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மின்சாரக் கட்டணத்தையும் மீண்டும் உயர்த்த அரசாங்கம் தயாராகி வருவதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைப்பதாக வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் கூறினார். அமெரிக்கத் தேர்தல் முடிவுகளையும் அங்கு ஏற்படும் அரசியல் மாற்றங்களையும் கவனிக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்ட அவர், மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்துமாறும் வலியுறுத்தினார்.
மக்களின் வரிச்சுமையைக் குறைத்து, வாக்குறுதியளிக்கப்பட்ட நிவாரணங்களை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.
நாட்டில் 80,000 பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி இருப்பதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், அவர்களுக்கும் ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் விவசாயிகளுக்கும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என மேலும் தெரிவித்தார்.


