சுவிட்சர்லாந்தின் AHV ஓய்வூதியத் திட்டத்தில், வழமையான டிசம்பர் மாத ஓய்வூதியத்துடன் முதன்முறையாக 13ஆவது ஓய்வூதியமும் வழங்கப்படவுள்ளது. இதன்படி, சுமார் 27 இலட்சம் பயனாளிகளுக்கு மொத்தம் 9.28 பில்லியன் பிராங்குகள் செலுத்தப்படவுள்ளன.
இந்தத் தொகை, டிசம்பர் மாத வழமையான ஓய்வூதியத்தையும் 13ஆவது ஓய்வூதியத்தையும் சேர்த்த மொத்தமாகும்; கூடுதல் ஓய்வூதியத்திற்கான செலவு மட்டும் அல்ல.
மத்திய சமூகக் காப்புறுதி அலுவலகம் (BSV) மற்றும் 74 AHV-Ausgleichskassen பிரதிநிதிகள், செவ்வாய்க்கிழமை Bern நகரில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் இத்தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அனைவருக்கும் ஒரே அளவிலான கூடுதல் தொகை கிடைக்காது
ஒருவர் 2026ஆம் ஆண்டில் பெற்ற மொத்த AHV முதியோர் ஓய்வூதியத்தில் பன்னிரண்டில் ஒரு பங்கே 13ஆவது ஓய்வூதியமாகக் கணக்கிடப்படும். எனவே, அனைவருக்கும் அவர்களது வழமையான ஒரு மாத ஓய்வூதியத்திற்குச் சமமான தொகை கிடைக்கும் என்று கூற முடியாது.
பயனாளிகள் தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை. கொடுப்பனவு தானாகவே வழங்கப்படும். சம்பந்தப்பட்ட அலுவலகத்தைப் பொறுத்து, வழமையான ஓய்வூதியத்துடன் ஒரே கொடுப்பனவாகவோ அல்லது இரண்டு தனித்தனிக் கொடுப்பனவுகளாகவோ பணம் செலுத்தப்படும்.


