கல்முனை ஆதார வைத்தியசாலையில் இன்று மகத்தான சாதனையாளர் பாராட்டு விழா! 217 வருட மருத்துவ பாரம்பரியத்தின் சரித்திரம்!!

அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பழமையான கல்முனை ஆதார வைத்தியசாலை, 217 ஆண்டுகளுக்கும் மேலான சேவைப் பாரம்பரியத்தைக் கொண்டது.

அங்கு இன்று (03) செவ்வாய்க்கிழமை மகத்தான சாதனையாளர் கௌரவிப்பு விழா
நடைபெறவுள்ளது.

ஆம், தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/26 இல் பொதுத்துறை பிரிவில் தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்த கல்முனை ஆதார வைத்தியசாலையின் சாதனையை பாராட்டிக் கௌரவிக்கும் விழா, வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் ஜி.சுகுணன் தலைமையில் இன்று (03) செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

வைத்தியசாலை மற்றும் வைத்தியசாலைக் குழு இணைந்து இவ்விழாவினை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

விசேட அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக சுகாதார விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

217 வருட மருத்துவ பாரம்பரியத்தின் சரித்திரம்.

கல்முனை ஆதார வைத்தியசாலை
இருநூற்றாண்டுகளைக் கடந்த மருத்துவப் பாரம்பரியம்! மக்களின் உயிர்காக்கும் சேவையில் ஒரு வரலாற்றுப் பயணம்!!
கிழக்கிலங்கையின் சுகாதார வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள கல்முனை ஆதார வைத்தியசாலையின் வரலாறு, வெறுமனே ஒரு மருத்துவ நிறுவனத்தின் வளர்ச்சிக் கதை மட்டுமல்ல. அது காலனித்துவ ஆட்சிக்காலம் தொடக்கம் இன்றுவரை பல தலைமுறை மக்களின் வாழ்வோடும், துயரங்களோடும், நம்பிக்கைகளோடும் பின்னிப் பிணைந்த மனிதநேயப் பயணமாகும்.

காலனித்துவ காலத்தில் ,1809 ஆம் ஆண்டு தொற்று நோய் வைத்தியசாலையாக (Infection Emergency Clinic) ஆரம்பிக்கப்பட்ட இவ்வைத்தியசாலை, படிப்படியாக வளர்ச்சி அடைந்து 1973 ஆம் ஆண்டு ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் 2004 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் (Line Ministry) கொண்டு வரப்பட்டு தற்போது வரை இயங்கி வருகிறது.

கல்முனை (வடக்கு) பிரதேச செயலாளர் பிரிவில் 3.10 ஹெக்டயர் உயர்ந்த நிலப்பரப்பில் இவ்வைத்தியசாலை அமைந்துள்ளது.

இதன் சேவை எல்லை வடக்கு தெற்காக சுமார் 90 கிலோமீட்டர் தூரத்தையும், கிழக்கு மேற்காக 30 கிலோமீட்டர் தூரத்தையும் உள்ளடக்கியது. களுவாஞ்சிக்குடி முதல் பொத்துவில் வரையான கரையோரப் பகுதி மக்களினதும், கல்-ஓயா குடியேற்றத் திட்டத்தில் வாழும் ஏழை மக்களினதும் மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. சுமார் 25 இலட்சம் மக்களுக்கு இவ்வைத்தியசாலை சேவையாற்றுகிறது.

1809 இல் ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை 217 வருட காலம் பிராந்தியத்தின் பல்வேறு சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்யும் விரிவான மருத்துவ சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.

ஆதார வைத்தியசாலைக்குரிய பல்வேறு விசேட பிரிவு வசதிகளுடன் 24 மணி நேர சீற்றி(CT scan )ஸ்கேன் சேவை வசதிகளுடன் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் அதி சிறந்த சுகாதார பராமரிப்பு சேவையாற்றி வருகிறது

தேசிய உற்பத்தித்திறன் விருதுகளில் தொடர் சாதனை

தேசிய உற்பத்தித்திறன் மற்றும் தரத்தில் தேசிய அளவில் கல்முனை வடக்கு வைத்தியசாலை தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது:

வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகரும் தற்போதைய மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான மருத்துவர் இரா.முரளீஸ்வரன் காலத்தில் தேசிய உற்பத்தி திறன் விருது விழாவில் நான்கு தடவைகள் விருதுகள் பாராட்டுக்கள் கிடைக்கப்பெற்றன.

2014 இல் பாராட்டு விருது (Commendation Award),2015 இல் – 3ஆம் இடம், 2018இல் – 3ஆம் இடம், 2020 இல் 2ஆம் இடம் என்று நான்கு தடவைகளில் தேசிய ரீதியில் பாராட்டைப் பெற்றது.

அதன் பின்னர் 2024 டிசம்பரில் வைத்தியசாலைப் பணிப்பாளராக கடமை ஏற்ற மருத்துவர் குணசிங்கம் சுகுணனின் தலைமைத்துவத்தில் 2025/2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மட்டத்தில் 2ஆம் இடம் பெற்று இவ் வைத்தியசாலை சாதனை படைத்துள்ளது.

உண்மையில், தேசிய உற்பத்தி திறன் விருதுக்கான முதலாம் கட்ட மதிப்பீட்டில் தேசிய மட்டத்தில் இந்த வைத்தியசாலை முதலிடத்தில் இருந்தது.அதனை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கில் வந்த இரண்டாம் கட்ட மதிப்பீட்டு ஆய்வின் பிரகாரம் இது இரண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எது எப்படி இருப்பினும், இவ்வருடம் 2025/26 தேசிய உற்பத்தித்திறன் விருதில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றிருப்பது இவ்வைத்தியசாலையின் அர்ப்பணிப்புள்ள ஊழியர்கள், கல்முனை ஆதார வைத்தியசாலையில் இன்று மகத்தான சாதனையாளர் பாராட்டு விழா!
217 வருட மருத்துவ பாரம்பரியத்தின் சரித்திரம்!!, பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலைக் குழுவினர் உள்ளிட்ட அனைவரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.

217ஆண்டுகளை கடந்தும் இளமை குன்றாது சேவையாற்றும் கல்முனை ஆதார வைத்தியசாலை, கிழக்கு மாகாண சுகாதாரத்துறையின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது என்றால் மிகையாகாது.

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா,
பிரதி தவிசாளர், வைத்தியசாலை குழு,
ஆதார வைத்தியசாலை, கல்முனை.