முன்மொழியப்படாத வீதி புனரமைப்புக்குத் தெரிவு : ஆளுநரிடம் நான்கு அமைப்புக்கள் முறையீடு

சண்முகம் தவசீலன்
2026.11.03
முல்லைத்தீவு மாவட்டம், கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட கணுக்கேணி மேற்கு பகுதியில், மக்கள் புனரமைக்குமாறு கோரிய வீதிக்குப் பதிலாக வேறொரு வீதி புனரமைப்புக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வீதியை மாற்றியமைக்குமாறு கோரி நான்கு அமைப்புக்கள் இணைந்து வடக்கு மாகாண ஆளுநருக்கு (27.10.2026) அன்று கடிதம் அனுப்பியுள்ளன.

கணுக்கேணி மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் அபிவிருத்திச் சங்கம், சனசமூக நிலையம் மற்றும் கமக்கார அமைப்பு ஆகிய நான்கு அமைப்புக்களும் இணைந்து இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளன.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட கணுக்கேணி வட்டாரத்தின் கணுக்கேணி மேற்கு கிராம அலுவலர் பிரிவில், ‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ் இந்துப் பாடசாலை வீதியின் முதலாம் குறுக்குத் தெரு புனரமைப்புக்காக உள்வாங்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த வீதியைப் புனரமைப்பதற்கு தாம் எவரும் முன்மொழியவில்லை எனவும், கடந்த ஆண்டு டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கணுக்கேணி மேற்கு முதலாம் குறுக்கு வீதியின் முதலாம் இணைப்பு வீதியையே புனரமைத்துத் தருமாறு கோரியிருந்ததாகவும் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இது தொடர்பாக எமது பிரதேச சபை உறுப்பினர் ஊடாக, பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் செயலாளரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்ததாகவும், அப்போது செயலாளரால் குறித்த வீதி நேரில் பார்வையிடப்பட்டு, புனரமைப்புப் பணிகளுக்குள் உள்வாங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாம் புனரமைக்குமாறு கோரிய வீதி மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் வீதியாகும். ஆனால், தற்போது அதற்குப் பதிலாக மக்கள் பயன்பாடு குறைந்த இந்துப் பாடசாலை வீதியின் முதலாம் குறுக்குத் தெரு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இதனையடுத்து, தமது வட்டாரப் பிரதேச சபை உறுப்பினருடன் இணைந்து தவிசாளர் மற்றும் செயலாளரை நேரில் சந்தித்து, தெரிவு செய்யப்பட்ட வீதியை மாற்றி, தாம் கோரிய கணுக்கேணி மேற்கு முதலாம் குறுக்கு வீதியின் முதலாம் இணைப்பு வீதியைப் புனரமைத்துத் தருமாறு கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் குறித்த பகுதிக்கு நேரில் வருகை தந்து, மக்கள் கோரிய வீதியைப் பார்வையிட்டதுடன், அதனைப் புனரமைப்பதற்கான அனுமதி கோரும் கடிதத்தைப் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஊடாக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாகப் பிரதேச சபைச் செயலாளர் ஊடாக அறிய முடிந்ததாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே எமது பிரதேச வீதிகள் தொடர்பில் நன்கு அறிந்தவர் என்ற வகையில், வடக்கு மாகாண ஆளுநர் இந்த விடயத்தில் தலையிட்டு, கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, அவர்கள் முன்மொழிந்த வீதியைப் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நான்கு அமைப்புக்களும் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன.

இக்கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், முல்லைத்தீவு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.