மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பில் விசேட கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பில் கால்நடைப் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கிலான விசேட கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (01) புதிய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, கால்நடைகளுக்காக அடையாளம் காணப்பட்ட மேய்ச்சல் நிலங்களை மகாவலி அதிகார சபையினூடாகப் பெற்றுக்கொள்வது தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், கால்நடைப் பண்ணையாளர்களுக்கு பொருத்தமான மேய்ச்சல் நிலங்களை வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளை வனவளத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபை இணைந்து முன்னெடுத்து வருவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன், காணி அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் கே. திலகநாதன், பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்