மட்டக்களப்பு – வந்தாறுமூலை ‘தாயக ஊற்று’ அமைப்பின் ஏற்பாட்டில், அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் இளையதம்பி சிறிநாத் அவர்களின் வழிகாட்டல் மற்றும் அமைப்பின் தலைவர் கா.இராமச்சந்திரன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கோறளைப்பற்று வடக்கு வாகரை கல்விக் கோட்ட பாடசாலைகளைச் சேர்ந்த க.பொ.த சா.த பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் கணித அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்குடன் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு விசேட வலுவூட்டல் கருத்தரங்கு கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டது.
கல்குட கல்வி வலயத்தின் வாகரை கோட்டத்திற்குட்பட்ட கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்,கட்டுமுறிவுக்குளம் அ.த.க. பாடசாலை, பால்சேனை தமிழ் மகா வித்தியாலயம்,வம்மிவட்டவான் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 115 மாணவர்களின் கணிதப் பாட அடைவு மட்டத்தை உயர்த்தும் நோக்கில் இவ்விசேட வலுவூட்டல் கருத்தரங்கு நடாத்தப்பட்டது.
பிரபல வளவாளர் த.அகில்ராஜ் அவர்களால் மாணவர்களுக்கான விசேட கணிதப் பாட வழிகாட்டல்களும் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
மாணவர்களின் கற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், கடந்த கால வினா-விடை கையேடுகள் மற்றும் அவசியமான கற்றல் கோப்புகள் என்பனவும் இதன்போது மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் சமூக ஆர்வலரும் தாயக ஊற்று அமைப்பு உறுப்பினருமான வைத்தியர் திருமதி காந்தா நிரஞ்சன், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினரும் தாயக ஊற்று அமைப்பின் உப தலைவருமான த.பிரபாகரன், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினரும் தாயக ஊற்று அமைப்பின் உறுப்பினருமான கா.நாகேந்திரன், கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை உறுப்பினரும் தாயக ஊற்று அமைப்பின் உறுப்பினருமான இ.சிவேந்திரன், கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலய அதிபர், சமூக ஆர்வலரும் தாயக ஊற்று அமைப்பு உறுப்பினருமான திருமதி சர்மி உதயகுமார், சமூக ஆர்வலரும் தாயக ஊற்று அமைப்பு உறுப்பினருமான கி.சந்திரகுமார், கதிரவெளி கிராம அபிவிருத்திச் சங்கச் செயலாளரும் தாயக ஊற்று அமைப்பின் உறுப்பினருமான குகதாசன் மற்றும் தாயக ஊற்று அமைப்பு உறுப்பினர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
குறித்த வலுவூட்டல் கருத்தரங்கிற்கு அமைப்பின் உறுப்பினரும் சமூக ஆர்வலருமான வைத்தியர் திருமதி காந்தா நிரஞ்சன் அவர்களினால் முழுமையான நிதி அனுசரணையை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


