(மருதமுனை நிருபர்கள்)
கிழக்கு மாகாணத்தின் மருதமுனையில் பிறந்து தேசிய சர்வதேச ரீதியாக அறியப்பட்ட பன்முக ஆளுமை மூத்த உலமா மர்ஹூம் அஷ்ஷெய்க் எப்.எம்.அஹமதுல் அன்ஸார் மௌலானா (நழீமி) அவர்களின் வாழ்வையும் சமூகப் பணிகளையும் நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவுரை நிகழ்வு, மருதமுனை பொது நூலக மண்டபத்தில் (24) சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
மருதமுனை பொது நூலகம் மற்றும் மருதமுனை ஊடகப் பேரவை ஆகியவற்றுடன் இணைந்து ரீ.எம்.நியூஸ் ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்து நடத்திய இந்நிகழ்வு, நூலகர் எஸ்.எம். அமீனுத்தீனின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது. தலைமை உரையை அறிவிப்பாளரும் கலாசார உத்தியோகத்தருமான ஏ.எல்.எம். ஷினாஸ் நிகழ்த்தினார்.நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், ஜம்இய்யத்துல் உலமா சபையின் கல்முனைக் கிளைத் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். முர்ஷித் முப்தி,தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், மருதமுனை ஊடகப் பேரவையின் செயலாளர் ஜெஸ்மி எம்.மூஸா, முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும்; விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எம்.பி.எம்.பைரூஸ், மௌலானாவின் மருமகனும் விரிவுரையாளருமான எச்.அல்-இஹ்ஸான், மர்ஹூம் மௌலானாவின் மூத்த சகோதரர் சட்டத்தரணி எப்.எம். அமீருல் அன்ஸார் ஆகியோர் மௌலானாவின் நினைவுகளை உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டனர்.
நிகழ்வின் நன்றியுரையை மர்ஹூம் அன்ஸார் மௌலானாவின் மருமகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் இம்திஸா ஹசன் நிகழ்த்தியதுடன் நிகழ்வின் இறுதியில், மர்ஹூம் அஷ்ஷெய்க் எப்.எம். அஹமதுல் அன்ஸார் மௌலானாவுக்காக விசேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்றது. மருதமுனை கபீர் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் அந்நூர் கல்வி நிலையத்தின் உஸ்தாத் அல்-ஹாபிழ் எம். உஸ்மான் லுத்பி (அந்நூரி) அவர்கள் துஆ பிரார்த்தனையை நிகழ்த்தினார். நிகழ்வுகளை ரீ.எம்.நியூஸ் ஊடக வலையமைப்பின் அறிவிப்பாளர்களான அலானி எம்.நியாஸ், இஸட்.எம்.சர்பான் ஆகியோர் தொகுத்து வழங்கினர்கள்.
“மௌலானாவை நினைத்துப் பார்கிறோம்” நிகழ்வின்போது, இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவராகவும் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றி வரும் ஜனாப் எம்.பி.எம்.பைரூஸ் அவர்களின் சேவைகளைப் பாராட்டி, ரீ.எம்.நியூஸ் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் மருதமுனை மக்களின் சார்பில் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார் இதேவேளை, மர்ஹூம் அஷ்ஷெய்க் எப்.எம். அஹமதுல் அன்ஸார் மௌலானாவின் கல்வி, சமய, சமூக மற்றும் ஊடகப் பணிகளைப் பாராட்டி, அவரது குடும்பத்தினருடன் இணைந்து நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. மௌலானாவின் வாழ்வையும் பணிகளையும் நினைவுகூர்ந்து, அவரது சமூகப் பங்களிப்புகளை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இந்நினைவுரை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


