எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்துக் குழுக் கூட்டம், மாவட்டப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில், பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (14) நடைபெற்றது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ. எச். கே. டி. பி. ரத்நாயக்க அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்டத்தின் போக்குவரத்து உட்கட்டமைப்பு அபிவிருத்தி கிராமிய வீதிகள் மற்றும் பாலங்களின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாலங்களின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், வீதிப் பாதுகாப்பு மற்றும் பயணிகள் போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
மேலும், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், பிரதம பொறியியலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், பொறியியலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த மாவட்டப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு அவர்கள், மாவட்டத்தில் வீதி விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.


