குருக்கள்மடம் அகழ்வில் ஒரு சில எச்சங்கள் மீட்பு, அவை குறித்த மனிதப் புதைகுழி தொடர்பானதா என ஆய்வு செய்யப்படுகின்றன…

சட்டத்தரணி – முபாறக் முஅஸ்ஸம்.

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது மனித எச்சங்கள் என்று நியாயமாகச் சந்தேகம் கொள்ளக்கூடிய சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவை பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என குறித்த வழக்கின் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தை 02ம் கட்டமாக அகழ்வாய்வு செய்யும் பணிகள் இன்றைய தினமும் தொடர்ந்து 08 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கினுடைய இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 08வது நாளாகவும் நடைபெற்று வருகின்றது.

இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் இடையிடையே பெய்த மழையின் காரணமாக அகழ்வுப் பணிகள் தொய்வு நிலையை அடைந்திருந்தன.

மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது இதுவரை மனித எச்சங்கள் என்று நியாயமாகச் சந்தேகம் கொள்ளக்கூடிய சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை பேராசிரியர் ராஜ்சோமதேவ உள்ளிட்ட குழுவினரால் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான இறுதி அறிக்கைகள் அவர்களால் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் பூரண விளக்கங்களை ஊடகங்கள் வாயிலாக தெளிவுபடுத்த முடியும்.

மேலும் இனங்காணப்பட்ட சில இடங்களிலும் நாளை ஒன்பதாவது நாளாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும்.

இந்த அகழ்வாய்வானது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவ, அவரது நிபுனத்துவக் குழு, கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனையுடன் வருகைதந்துள்ள இரண்டு சட்ட வைத்திய அதிகாரிகள், மண்முனை தென்எருவில்ப் பற்றுப் பிரதேச சபையின் ஊழியர்கள், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பொறுப்பாளர் தலைமையிலான குழுவினர், குற்றத் தடவியல் பொலிஸ் உத்தியோகத்தர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பிரதிநிகள் ஆகியோர் முன்னிலையிலே இந்த அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.