20 மில்லியன் ரூபா செலவில் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானம் அபிவிருத்தி

அபு அலா

அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தின் உள்ளக அரங்கை நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்காக சுமார் 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் தெரிவித்தார்.

பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸின் அயராத முயற்சியின் பலனாகவே இப் பிரமாண்டமான அபிவிருத்தித் திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டில், மத்திய அரசாங்கம் 15 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதுடன், எஞ்சிய 5 மில்லியன் ரூபாவை அட்டாளைச்சேனை பிரதேச சபை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எமது பிரதேச இளைஞர்கள் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தமது விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என்று குறிப்பிட்ட அவர், இப்பொது விளையாட்டு மைதானத்தில் நவீன உள்ளக அரங்குகளை நிர்மாணிப்பதன் மூலம், விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கக்கூடிய பல திறமையான வீரர்களை எமது மண்ணில் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.