ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களிடம் இலங்கை ஜனநாயக முன்னணியின் தேசிய தலைவர் ஏ.பி.கமால்தீன் வேண்டுகோள்!
அபு அலா
வளைகுடா நாடுகளில் நிலவும் தொடர்ச்சியான அதிகாரப் போராட்டங்கள் மற்றும் மோதல் நிலைகள் காரணமாக, தங்களது உடைமைகளை விட உயிர்களைப் பெரிதாக மதித்து தாயகம் திரும்ப முடியாமல் இலங்கையை அண்மித்த சர்வதேசக் கடல் பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈரானிய மற்றும் ஏனைய நாட்டுக் கப்பல்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசு உடனடியாக உதவ முன்வர வேண்டும் என இலங்கை ஜனநாயக முன்னணியின் தேசிய தலைவர் ஏ.பி.கமால்தீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று (11) வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஏகாதிபத்திய வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டிகளினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால், இலங்கைக் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள ஈரானிய நாட்டின் 19 கப்பல்கள் உட்பட ஏனைய நாட்டுக் கப்பல்களும் பல தினங்களாகத் தமது நாடுகளுக்குச் செல்ல முடியாமல் முடங்கியுள்ளன. இக்கப்பல்களில் உள்ள மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் உணவு, நீர் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையினால் கடுமையான சிரமங்களை எதிர்நோக்கித் தத்தளித்து வருகின்றனர்.
உலகளவில் ஜனநாயகத்தைப் பின்பற்றுவதில் முன்வரிசையில் இருக்கும் நாடாகவும், மனிதாபிமான அடிப்படையிலும் இலங்கை இவர்களுக்கு உதவ வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, கடந்த காலங்களில் இலங்கை எதிர்கொண்ட பல நெருக்கடியான சந்தர்ப்பங்களில் ஈரான் நாடு இலங்கைக்கு பல உதவிகளை வழங்கியுள்ளது. அவ்வாறான ஒரு நட்பு நாட்டிற்கு இந்த ஆபத்தான வேளையில் நேசக்கரம் நீட்டாமல் வேடிக்கை பார்ப்பது மிகவும் கவலையளிக்கும் விடயமாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தனது பாரம்பரிய வெளியுறவுக் கொள்கையைப் பேணி, சர்வதிகாரத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் சோரம் போகாமல் ஜனநாயகப் பாதையில் பயணிக்க வேண்டும். எனவே, ஜனாதிபதியும், அமைச்சரவையும் உடனடியாகத் தலையிட்டு, இலங்கைக் கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள 19 ஈரானியக் கப்பல்களுக்கும் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி, மனிதாபிமான அடிப்படையில் நேசக்கரம் நீட்ட முன்வர வேண்டுமென அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


