கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக் கூட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் 2026ஆம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டுக் கூட்டம் பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் தலைமையில் நேற்று (01.10.2026) பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொலிஸ் திணைக்களம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு பிரிவு, வைத்தியசாலை உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுடன், பிரதேச செயலகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வெளிக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

அத்துடன், சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் கீழ், வீடற்ற சிறார்களின் குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் “திவியட்ட சவியக்” திட்டத்தின் கீழ், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு பயனாளிகளுக்கு வீடமைப்புத் திட்டத்தின் முதலாம் கட்டப் பணிகளுக்கான கொடுப்பனவு கையளிக்கப்பட்டது.

இதற்கமைய, தெரிவு செய்யப்பட்ட இரு பயனாளிகளுக்கும் தலா ரூபா 500,000 வீதம், மொத்தமாக ரூபா 1,000,000 முதலாம் கட்டப் பணிகளுக்கான கொடுப்பனவாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் மூலம் குறித்த பயனாளிகளுக்கான வீடமைப்புப் பணிகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.