எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
எல்-நினோ தொடர்பிலான விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில், அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் ஏ. எஸ். எம். சியாத் அவர்களின் ஏற்பாட்டில், பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (30) இடம்பெற்றது.
தற்போது உலகளாவிய ரீதியில் பேசுபொருளாகியுள்ள எல்-நினோ (El Niño) காலநிலை நிலைமை, அதனால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரச திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் இவ்விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, கிழக்குப் பல்கலைக்கழக புவியியல் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கிருபா ராஜரெட்ணம் அவர்கள் கலந்துகொண்டு, எல்-நினோ காலநிலை தொடர்பான விடயங்களை தெளிவூட்டினர்.
இதன்போது எல்-நினோ நிலைமை ஏற்படும் விதம், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எதிர்காலத்தில் எதிர்நோக்கக்கூடிய விளைவுகள் பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வு மற்றும் இதன் தாக்கங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இவ்விழிப்புணர்வு நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், உயர் அதிகாரிகள், அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


