(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளான 02, 05, 07 மற்றும் 11 ஆகியவற்றில் அமுல்படுத்தப்படும் உணவு உற்பத்திக்கான வாழ்வாதார தொழில் உபகரணங்களை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
அரசாங்கத்தின் பிரஜாசக்தி வேலைத்திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டு வருடத்தில் முன்மொழியப்பட்ட வாழ்வாதார அபிவிருத்தி வேலைதிட்டத்தில் நான்கு வேலைத் திட்டங்களுக்கான இத்தொழில் உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வில், கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியலமைப்புப் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இந்த உபகரணங்களைக் கையளித்தார்.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட சாய்ந்தமருது 02 ஆம் பிரிவு கிராம சக்தி சங்கத்திற்கு ரூபா 10 இலட்சம் பெறுமதியான உபகரணங்களும் சாய்ந்தமருது 05 ஆம் பிரிவு நூறாணியா பெண்கள் அமைப்பிற்கு 06 இலட்சம் பெறுமதியான உபகரணங்களும் சாய்ந்தமருது 07 ஆம் பிரிவு ஹிரா பெண்கள் அமைப்பிற்கு ரூபா 10 இலட்சம் பெறுமதியான உபகரணங்களும் சாய்ந்தமருது 11ஆம் பிரிவு கோல்டன் சமூர்த்தி அமைப்பிற்கு ரூபா 12 இலட்சம் பெறுமதியான உபகரணங்களும் என சுமார் 38 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
சாய்ந்துமருது பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸ்ஸான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முஆபிக்கா, கணக்காளர் திருமதி எம்.என்.எம்.லரீப், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையளர் ஏ.சீ.எ.நஜீம் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக வலுவூட்டல் அதிகாரிகள், கிராம சேவை அதிகாரிகள், சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள், பிரஜாசக்தி அமைப்பின் தவிசாளர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.


