மாவட்ட செயலகத்தில் தூய்மையான தேங்காய் எண்ணெய் நுகர்வு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

ஆரோக்கியமான மற்றும் தரமான தேங்காய் எண்ணெய் நுகர்வு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்கள் தலைமையில் இன்று (22) மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

தெங்கு அபிவிருத்தி அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் அரச அதிகாரிகளுக்காக முன்னெடுக்கப்படும் “தேங்காய் வீணாவதைக் குறைத்தல் மற்றும் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் சேவைகள்” தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் சிரேஷ்ட பரிசோதகர் எச்.ஆர்.ஏ. சந்தன, கிழக்கு மாகாண பரிசோதகர் அ.அ.அஸீர் அஹமட் மற்றும் நிகழ்ச்சி உதவியாளர் P. வி துர்ஷன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் தெங்கு அபிலிருத்தி அதிகார சபையின் பரிசோதகர்கள், அதிகாரிகள், பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.

இதன்போது, தரமான மற்றும் தூய்மையான தேங்காய் எண்ணெயின் பண்புகள், அதன் பயன்பாட்டினால் கிடைக்கக்கூடிய நன்மைகள், தேங்காய் எண்ணெயைச் சேமித்து பயன்படுத்தும் முறைகள் எண்ணெயின் தரத்தை அடையாளம் காணும் வழிமுறைகள் மற்றும் தேங்காய் உற்பத்திப் பொருட்களை வீணாக்காமல் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், நுகர்வோர் தரமான தேங்காய் எண்ணெயைத் தெரிவுசெய்து கொள்வதில் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் அதிகாரிகளுக்கு தெளிவூட்டப்பட்டது.

தெங்கு அபிவிருத்தி அதிகார சபையானது தெங்கு உற்பத்தியின் மூலம் கடந்த வருடம் 1500 மில்லியன் அமேரிக்கன் டொலர்களும் இவ்வருடம் 2500 மில்லியன் டொலர் அந்நிய செலவானி பெற்றுக்கொள்தற்கு தேவையான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.