( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றாக விளங்கும் தாமரைக்குளம், தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக என்றுமில்லாதவாறு நீரின்றி வறண்டு வருவதால், அதனைச் சார்ந்து வாழும் பல்வேறு தரப்பினரும் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
ஒருகாலத்தில் நீர் நிறைந்து விவசாயத்துக்கும், கால்நடைகளுக்கும், மீன்பிடித் தொழிலுக்கும், தாமரை விதை சேகரிப்பு போன்ற வாழ்வாதார நடவடிக்கைகளுக்கும் துணைநின்ற தாமரைக்குளம் இன்று வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது.
குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, பல பகுதிகள் வறண்டு காணப்படுவதால் விவசாயிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அதேவேளை, குளத்தை நம்பி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
கால்நடைகளுக்கான குடிநீர் தேவையும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கால்நடைகளை வளர்த்து வரும் மக்கள், அவற்றுக்குத் தேவையான நீரைப் பெற்றுக்கொள்வதற்காக மாற்று வழிகளைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், தாமரைக்குளத்தில் கிடைக்கும் தாமரை விதைகளைச் சேகரித்து விற்பனை செய்வதன் மூலம் குடும்பங்களை நடத்தி வந்த தொழிலாளர்களும் வறட்சியால் தொழில் வாய்ப்பை இழந்து வருகின்றனர்.
ஒரு நீர்நிலை வறண்டு போவது என்பது வெறுமனே நீர் பற்றாக்குறையல்ல; அதனுடன் தொடர்புபட்ட பல குடும்பங்களின் அன்றாட வாழ்வாதாரமும் வறண்டு போவதாகவே அமைந்துள்ளது.
எல்நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கங்களும், தொடர்ச்சியான வரட்சியும் நீர்நிலைகளின் எதிர்காலம் தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், தாமரைக்குளத்தின் தற்போதைய நிலைமையும் அதிகாரிகளின் உடனடி கவனத்துக்கு வர வேண்டிய ஒன்றாகியுள்ளது.
குளத்தைச் சார்ந்து வாழும் விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்கள், கால்நடை வளர்ப்போர் மற்றும் தாமரை விதை சேகரிப்பாளர்கள் உள்ளிட்ட மக்களின் நிலைமையை கருத்திற்கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது தொடர்பாக மேலும் பல விவரங்களை அறிய திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரனை தொடர்பு கொண்டபோது முயற்சி பலனளிக்கவில்லை .


