இந்தியாவில் வெற்றிக்கொடி நாட்டிய சீ தமிழ் மகாநடிகை காரைதீவு நிவேதிகா இலங்கை வருகை!

( வி.ரி. சகாதேவராஜா)

இந்தியாவின் Zee தமிழ் தொலைக்காட்சியின் “மகாநடிகை” போட்டி நிகழ்வில் இலங்கையின் கிழக்கு காரைதீவு மண்ணைச் சேர்ந்த செல்வி நிவேதிகா இராசையா இரண்டாம் றன்னஸ்அப் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இயல், இசை,நாடகம் எனும் முத்தமிழ் மணக்கும் மண்ணாம் யாழ்நூல் தந்த விபுலானந்த அடிகளார் எனும் உலகப் புகழ் பூத்த புலவர் அவதரித்த காரைதீவு மண்ணைச் சேர்ந்த செல்வி நிவேதிகா இராசையா(26)
தன் கலைத்திறனினால் இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களாக போட்டியில் பங்கேற்று இன்று சர்வதேசத்தை கவர்ந்து மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

யாழ்நூல் தந்த அடிகளாரின் கலைவழி நின்று, அவர்தம் பிறந்த மண்ணிற்கும் பெருமை சேர்த்த
நிவேதிகா இராசையா காரைதீவு முன்னாள் தவிசாளர் செல்லையா இராசையாவின் மகளாவார்.

அத்துடன் IBC தமிழின் நெறியாக்கத்தில் உருவாகியுள்ளதும், மக்களின் மாபெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் வெளிவரவுள்ளதுமான “போராட்டம்” திரைப்படத்தில் இராசையா நிவேதிகா கதாநாயகியாக திறம்பட நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீ தமிழ் இந்திய தொலைக்காட்சியின் “மகா நடிகை” போட்டி நிகழ்வில் முதற் சுற்றில் 18 பேருடன் போட்டியிட்டு பின்பு எட்டு , ஜந்து என தரப்படுத்தப்பட்டு இறுதி தேர்வுக்கு மூன்றாம் இறுதி போட்டியாளராக அவர் தெரிவாகி இருந்தார்.

இறுதி தேர்வில் செகண்ட் ரணர்அப் இடத்தினைப் பெற்று சாதனை படைத்தார்.

அவர் அவரது குடும்பம் கடந்த வாரம் இலங்கை வந்து சேர்ந்துள்ளனர்.

அவரது சாதனையை பாராட்டி கௌரவிக்கும் விழா கடந்த 19 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியாவில் கோலாகலமாக நடைபெற்றது.