லண்டனில் எஸ். அகஸ்தியர் நூற்றாண்டு விழா

– ஐங்கரன் விக்கினேஸ்வரா

எழுத்தாளர் எஸ். அகஸ்தியரின் நூற்றாண்டு விழாவும், அவரது வாழ்க்கை மற்றும் படைப்புகள் குறித்த ‘இலங்கையின் குறுமுனி தரிசனங்கள் (1926–2026)’ நூல் வெளியீடும் லண்டன் சென் அன்ருஸ் ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், இளைய தலைமுறையினர் மற்றும் அகஸ்தியரின் உறவினர்கள் பங்கேற்ற இவ்விழாவில், அவரது வாழ்வில் பக்கபலமாக இருந்த மனைவி நவமணி கௌரவிக்கப்பட்டார்.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் சுஜீறா நவஜீவா வரவேற்புப் பாடலை வழங்கினார். எஸ்.பி. ஜோகரட்னம் வரவேற்புரையாற்றினார். ஊடகவியலாளர் எஸ்.கே. ராஜன், பாரிசில் அகஸ்தியருடன் கொண்டிருந்த நெருக்கமான உறவையும், இறுதிவரை அவர் எழுத்துலகில் இளைஞர்போன்ற உற்சாகத்துடன் இயங்கியதையும் நினைவுகூர்ந்தார். ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா, அகஸ்தியரின் படைப்புகளில் வெளிப்படும் யாழ்ப்பாணத்தின் பண்பாடு, நிலம் மற்றும் மொழியின் தனித்துவத்தை எடுத்துரைத்தார். ஆய்வாளர் வி. சிவலிங்கம், அவரது எழுத்துகள் சமூக மாற்றத்தையும் முற்போக்கு சிந்தனைகளையும் தூண்டியதாகக் குறிப்பிட்டார்.

கவிஞர் அருண் வேணுகோபால், விமர்சகர் மு. நித்தியானந்தன் உள்ளிட்டோர் அகஸ்தியரின் இலக்கியப் பங்களிப்பை நினைவுகூர்ந்தனர். அவரது முழுச் சிறுகதைகளையும் தொகுக்கும் பணியின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது. இளைய தலைமுறையினர் ஆர்வத்துடன் பங்கேற்ற இவ்விழாவில் பலர் கௌரவிக்கப்பட்டனர். அகஸ்தியரின் புதல்வி நவஜோதி ஜோகரட்னம் நன்றி தெரிவித்தார். நிறைந்த மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு, அகஸ்தியரின் இலக்கியப் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.