சவூதி அரேபியாவில் மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள இளைஞர் சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஹஸ்பர் ஏ.எச்-

சவூதி அரேபியாவில் மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கை கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இளைஞன் சிவராசா அனோஜன் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, அவரது உயிரைக் காப்பாற்ற தேவையான அனைத்து சட்டரீதியான மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும் இது தொடர்பில் பாராளுமன்ற குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியனின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உப தவைவரும் தம்பலாகாமம் பிரதேச சபையின் உப தவிசாளருமான வி. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (18) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்,
இது தொடர்பில் மேலும் தெரிவிப்பதாவது

“அனோஜனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன. ஒரு இலங்கையரின் உயிர் தொடர்பான விடயம் என்பதால், இந்த விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டியது அவசியமாகும்.

அனோஜனின் குடும்பத்தினரின் நிலைமையையும் கருத்தில் கொண்டு, அவருக்கு சட்ட உதவி கிடைப்பதற்கும், மரண தண்டனையை தவிர்ப்பதற்கான சட்ட மற்றும் இராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்வதற்கும் இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சவூதி அரேபிய அரசாங்கத்துடன் தேவையான இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, இந்த விடயத்திற்கு சாத்தியமான மனிதாபிமான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அனோஜனின் குடும்பத்தினர் அனுபவித்து வரும் துயரமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அவர்களின் எதிர்பார்ப்புக்கு உரிய பதில் கிடைக்க வேண்டும். இந்த விடயத்தில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.