Switzerland-இல் வெளிநாட்டவர்கள் வேலை செய்வதற்கான அனுமதியைப் பெறுவது தொடர்பாக அண்மையில் “Employer-Sponsored Immigration” என்ற சொல் இணையத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதைப் பார்க்கும்போது, Switzerland வெளிநாட்டவர்களுக்காக புதிதாக ஒரு குடியேற்றத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதா என்ற கேள்வி எழலாம். ஆனால் இது புதிய திட்டம் அல்ல. ஒரு சுவிஸ் நிறுவனம் வெளிநாட்டில் இருக்கும் ஒருவருக்கு வேலை வழங்கி, அவரை Switzerland-க்கு அழைத்து வந்து வேலைக்கு அமர்த்துவதற்குத் தேவையான அனுமதியைப் பெறும் நடைமுறையையே இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.
Switzerland-க்கு வெளிநாடுகளில் இருந்து பலர் வேலைக்காக வருகின்றனர். ஆனால் எல்லா நாட்டவர்களுக்கும் ஒரே விதிமுறை இல்லை. குறிப்பாக EU/EFTA நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும், அந்த நாடுகளைச் சேராதவர்களுக்கும் விதிமுறைகளில் பெரிய வேறுபாடு உள்ளது.
EU நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் Norway, Iceland, Liechtenstein போன்ற EFTA நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் Switzerland-இல் வேலை செய்வது ஒப்பீட்டளவில் எளிதானது. அவர்கள் வேலை செய்யும் காலத்தைப் பொறுத்து தேவையான பதிவு அல்லது அனுமதி நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். நீண்ட காலம் வேலை செய்வதாக இருந்தால், வேலை ஒப்பந்தத்துடன் சம்பந்தப்பட்ட மாநில அதிகாரிகளிடம் பதிவு செய்து தேவையான குடியிருப்பு மற்றும் வேலை அனுமதியைப் பெறலாம்.
ஆனால் Sri Lanka, India போன்ற EU/EFTA அல்லாத நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு நடைமுறை மிகவும் கடுமையானது. ஒரு சுவிஸ் நிறுவனம் வேலை தருவதாகக் கூறி வேலை ஒப்பந்தம் வழங்கியிருந்தாலும், அதனால் மட்டும் Switzerland வந்து வேலை செய்ய முடியாது. அந்த நபரை வேலைக்கு எடுக்க விரும்பும் சுவிஸ் நிறுவனம், அவருக்கான வேலை அனுமதியை அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
Switzerland குடியேற்றத்திற்கான மத்திய அதிகாரமான SEM விதிகளின்படி, EU/EFTA அல்லாத நாட்டைச் சேர்ந்த ஒருவரை Switzerland-இல் வேலை செய்ய அனுமதிப்பது, நாட்டிற்கும் அதன் பொருளாதாரத்திற்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். பொதுவாக இவ்வாறு வருபவர்கள் நல்ல கல்வித் தகுதி, குறிப்பிட்ட தொழிலில் சிறப்புத் திறமை மற்றும் போதுமான வேலை அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
மேலும், அந்த வேலைக்கு தேவையான தகுதியுள்ள ஒருவரை Switzerland அல்லது EU/EFTA நாடுகளைச் சேர்ந்தவர்களில் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை வேலை வழங்கும் நிறுவனம் நிரூபிக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம். ஏனெனில் வேலைவாய்ப்புகளில் Switzerland மற்றும் EU/EFTA நாட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதனால்தான் Sri Lanka, India போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக Switzerland-க்கு வேலைக்காக வருவது சற்று கடினமான நடைமுறையாக உள்ளது.
அதேநேரம், சில நாடுகளைச் சேர்ந்த இளம் தொழில் நிபுணர்களுக்கு Switzerland தனியான வாய்ப்பையும் வழங்குகிறது. இது “Young Professionals” என்ற திட்டமாகும். படிப்பு அல்லது தொழிற்பயிற்சியை முடித்த இளைஞர்கள் Switzerland-க்கு வந்து தங்களது தொழில் அனுபவத்தையும் மொழித் திறனையும் வளர்த்துக்கொள்ள இந்தத் திட்டம் உதவுகிறது. Argentina, Australia, Canada, Chile, Indonesia, Japan, Monaco, New Zealand, Philippines, South Africa, Tunisia, Ukraine மற்றும் USA உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்தவர்கள், தேவையான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த முடியும்.
எனவே, “Employer-Sponsored Immigration” என்பது Switzerland-க்கு வருவதற்கான புதிய அல்லது சுலபமான குடியேற்றத் திட்டம் அல்ல. குறிப்பாக EU/EFTA அல்லாத நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஒரு சுவிஸ் நிறுவனம் வேலை வழங்கினாலும், அவர் Switzerland வருவது உறுதி என்று கூற முடியாது.
வேலை ஒப்பந்தம் கிடைத்த பின்னரும் அந்த நபரின் கல்வித் தகுதி, வேலை அனுபவம், தொழில்திறன், வழங்கப்படும் சம்பளம், வேலை நிபந்தனைகள் மற்றும் அந்த ஆண்டில் வழங்கக்கூடிய வேலை அனுமதிகளின் எண்ணிக்கை போன்ற பல விடயங்கள் அதிகாரிகளால் பரிசீலிக்கப்படும். அதன் பின்னரே இறுதி வேலை அனுமதி வழங்கப்படும்.
சுவிஸ் நிறுவனம் வேலை கொடுத்தால் மட்டும் Switzerland வர முடியாது. அந்த நிறுவனத்தின் வேலை வாய்ப்புடன், சுவிஸ் அதிகாரிகளின் வேலை அனுமதியும் கட்டாயம் தேவை.


