AI மனிதகுலத்திற்கு மிகப்பெரிய நன்மைகளை வழங்கக்கூடிய தொழில்நுட்பமாக இருந்தாலும், “எவ்வளவு வேகமாக AI-ஐ உருவாக்க முடியும்?” என்பதைவிட “எவ்வளவு பாதுகாப்பாக உருவாக்க முடியும்?” என்ற கேள்வி இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது..
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம், அதனைப் பாதுகாப்பாகக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகளைவிட வேகமாக முன்னேறக்கூடும் என Anthropic நிறுவனத்தின் CEO Dario Amodei எச்சரித்துள்ளார்.
AI வளர்ச்சியை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்பது அவரது கோரிக்கை அல்ல. மாறாக, மிகவும் சக்திவாய்ந்த AI மாடல்களின் திறன்களை அதிகரிக்கும் வேகத்தைக் குறைத்து, அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னரே அடுத்தகட்ட வளர்ச்சிக்குச் செல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
மேம்பட்ட AI தொழில்நுட்பம் இணையத் தாக்குதல்கள் உள்ளிட்ட ஆபத்தான செயல்களுக்குத் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என Amodei எச்சரிக்கிறார்.
அதைவிட முக்கியமாக, எதிர்காலத்தில் மிகவும் சக்திவாய்ந்த AI அமைப்புகள் தொடர்ந்து மனிதர்களின் கட்டுப்பாட்டில் இருக்குமா என்ற கேள்வியையும் அவர் எழுப்புகிறார்.
குறிப்பாக AI-யே மேலும் சக்திவாய்ந்த AI-ஐ உருவாக்க உதவும் நிலை ஏற்பட்டால், தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் மிக அதிகமாகலாம் என்பது அவரது கவலை
இதற்காக AI நிறுவனங்களில் சுயாதீன பாதுகாப்புச் சோதனைகள், நாடுகளுக்கு இடையிலான பொதுவான பாதுகாப்புத் தரநிலைகள், நீண்டகாலத்தில் சர்வதேச ஒப்பந்தங்கள் ஆகியவை அவசியம் என Amodei வலியுறுத்துகிறார்.
Amodei-ன் கருத்துக்கு OpenAI CEO Sam Altman ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், AI-யின் எல்லைகளை மிகவும் கவனமாக அணுக வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..


