39°C காய்ச்சலுடன் குழந்தையை Hort-இல் மறந்துவிட்ட பராமரிப்பாளர்!

பூட்டிவிட்டுச் சென்றதால் Winterthur-இல் அதிர்ச்சி சம்பவம்

Winterthur நகரின் Hort Zelgli குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் பெற்றோர்களை அதிர்ச்சியடையச் செய்யும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உடல்நலம் சரியில்லாத சிறுவனை பராமரிப்பாளர் சோபாவில் படுத்து ஓய்வெடுக்க அனுமதித்துள்ளார். சிறுவன் அங்கேயே தூங்கிவிட்டான். ஆனால் பராமரிப்பு நேரம் முடிந்தபோது மற்ற குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பிய ஊழியர், சோபாவில் தூங்கிக்கொண்டிருந்த சிறுவனை கவனிக்காமல் நிலையத்தைப் பூட்டிவிட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை சுமார் 5.45 மணியாகியும் மகன் வீடு திரும்பாததால், தாய் Mikaela Spasova பதற்றமடைந்தார். குடும்பத்தினர், அறிமுகமானவர்கள் மற்றும் பொலிஸாரும் சேர்ந்து இரவு 7.30 மணி வரை சிறுவனைத் தேடியுள்ளனர்.

இதற்கிடையில் Hort-ஐ தொலைபேசியில் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகளுக்கும் பதில் கிடைக்கவில்லை என தாய் தெரிவித்துள்ளார்.

பின்னர் Hort-இல் விழித்த சிறுவன் அச்சமடைந்து அழுதபடி வெளியே வந்ததாகவும், தேடலில் ஈடுபட்டிருந்த மற்ற குழந்தைகள் அவனை கண்டதாகவும் கூறப்படுகிறது.

அப்போது சிறுவனுக்கு 39°C காய்ச்சல் இருந்ததாக தாய் தெரிவித்துள்ளார். தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதுகூட தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்பதே மிகவும் அதிர்ச்சியளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Hort-ஐ நடத்தும் Winterthur நகர நிர்வாகம் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது. குடும்பத்தினருடன் உடனடியாக விளக்கக் கூட்டம் நடத்தப்பட்டதாகவும், சம்பவத்திற்காக பொறுப்பாளர்கள் முறையாக மன்னிப்புக் கேட்டதாகவும் தெரிவித்துள்ளது.

எங்கே தவறு ஏற்பட்டது, மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவையா என்பதும் உள்நிலையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக நகர நிர்வாகம் கூறுகிறது.