இலங்கை கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈரானியக் கப்பல் மாலுமிகளை மாற்ற அனுமதி!

இலங்கை கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈரானியக் கப்பலில் உள்ள மூன்று மாலுமிகளை மாற்றுவதற்கு ஈரானிய அரசாங்கம் விடுத்த கோரிக்கையை இலங்கை ஏற்கும் என்று அறிவிக்கப்பபட்டுள்ளது.

இது தூதரக மற்றும் பாதுகாப்பு வழிகள் ஊடாகக் கையாளப்படும் என்றும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்தே பிரதி அமைச்சர் இந்த பதிலை அளித்தார்.

திருகோணமலை கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தக் கப்பலில் உள்ள மூன்று மாலுமிகளும் நீண்ட நாட்களாகக் கடுமையான மன அழுத்தம் மற்றும் சோர்வு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்குப் பதிலாகப் புதிய மாலுமிகளை நியமிக்க அனுமதிக்க வேண்டும் என ஈரான் தூதரகம் கோரியிருந்ததாக ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில் குறித்த கோரிக்கைக்குப் பாதுகாப்பு அமைச்சகம் ஏற்கனவே ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில், வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாதுகாப்புத் துறைகளின் அதிகாரப்பூர்வ நடைமுறைகள் மூலம் மாலுமிகளை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனப் பிரதி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.