Zürich நகரின் மிகப்பெரிய மக்கள் விழாக்களில் ஒன்றான “Züri Fäscht” மீண்டும் நடத்தப்படவுள்ளது. கடைசியாக 2023ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் பெருவிழாவை புதிய வடிவத்தில் மீண்டும் கொண்டுவர Zürich நகர நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய நகரத் தலைவர் Raphael Golta, நகர விழாவுக்காக தயாரிக்கப்பட்ட நான்கு சாத்தியமான திட்டங்களில் ஒன்றை தொடர்ந்து முன்னெடுக்க நகரசபை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய விழா வடிவம், அதை நடத்தவுள்ள புதிய அமைப்பு மற்றும் முடிவுக்கான காரணங்களை 15 செப்டம்பர் 2026 நடைபெறும் ஊடக சந்திப்பில் Golta அறிவிக்கவுள்ளார்.
எப்போது Züri Fäscht?
இதுதான் இன்னும் தெளிவாகாத முக்கிய விடயம். அடுத்த Züri Fäscht நடைபெறும் தேதி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. செப்டம்பர் 15 ஊடக சந்திப்பில் இதுகுறித்த மேலதிக தகவல்கள் வெளியாகலாம்.
பாரம்பரியமாக Züri Fäscht மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஜூலை மாதத்தின் முதல் வார இறுதியில் நடைபெற்றது. கடந்த காலங்களில் இந்தப் பெருவிழா 2.5 மில்லியன் வரையான பார்வையாளர்களை Zürich நகருக்கு ஈர்த்துள்ளது.
2023 இறுதியில், விழாவை நடத்திவந்த Verein Zürcher Volksfeste நகரத்துடனான ஒப்பந்தத்தை நிறுத்தியதைத் தொடர்ந்து பழைய வடிவிலான Züri Fäscht தொடருமா என்ற கேள்வி எழுந்தது.
இப்போது நகர நிர்வாகம் பெருவிழாவை மீண்டும் கொண்டுவர விரும்புகிறது. அதேநேரத்தில், எதிர்கால விழாவால் நகரத்திற்கு ஏற்படும் போக்குவரத்து, சத்தம், கழிவுகள் மற்றும் பொதுவான சுமைகளைக் குறைப்பதும் புதிய திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும்.


