Zürich HB-யில் ரயிலின் கீழ் சிக்கிய 58 வயது நபர் – படுகாயம்!

சூரிச் பிரதான ரயில் நிலையத்தில் (Zürich Hauptbahnhof) வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் 58 வயதுடைய ஒருவர் கடுமையாகக் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நள்ளிரவுக்குச் சற்று பின்னர் புறப்படத் தயாராக இருந்த ரயிலில் ஏற அவர் முயன்றுள்ளார். ஆனால் ரயிலின் கதவுகள் ஏற்கனவே பூட்டப்பட்டிருந்ததால், அவர் ரயில் பெட்டியை பலமுறை காலால் உதைத்துள்ளார்.

அதன்பின்னர் ரயில் நகரத் தொடங்கியபோது, 58 வயதுடைய அந்த நபர் ரயிலின் கீழ் சிக்கி படுகாயமடைந்தார்.

சம்பவ இடத்திற்கு முதலில் வந்த Zürich Kantonspolizei அதிகாரிகள் உடனடியாக உயிர்காக்கும் அவசர முதலுதவிகளை மேற்கொண்டனர். பின்னர் மருத்துவக் குழுவினர் சிகிச்சையளித்து, ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வேறு நபரின் தவறு இல்லை

இதுவரையான விசாரணைகளின் அடிப்படையில், இந்த விபத்தில் மூன்றாம் நபரின் தவறு அல்லது தலையீடு இல்லை (Drittverschulden ausgeschlossen) என்று Zürich Kantonspolizei தெரிவித்துள்ளது.

மீட்பு மற்றும் அவசர நடவடிக்கைகளில் Kantonspolizei Zürich, SBB-யின் பல்வேறு பிரிவுகள் மற்றும் Schutz & Rettung Zürich ஆகியவை ஈடுபட்டன.