ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வெளியிட்டுள்ள அறிக்கையை, இலங்கை அரசாங்கத்தை வரவேற்று வெளிவந்த அறிக்கையாக ஒருசில ஊடகங்கள் திரிபுபடுத்திச் செய்தி வெளியிட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சாடியுள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் நிலையியல் கட்டளை 27 / 2 இன் கீழ் விசேட கூற்றையொன்றை முன்வைத்து உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். பொறுப்புக்கூறல், காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் காணி விடுவிப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்னவென்று அவர் கேள்வி எழுப்பினார்.
சாணக்கியன் எம்.பி எழுப்பியுள்ள முக்கிய கேள்விகள் மற்றும் சுட்டிக்காட்டல்கள்:
பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச தலையீடு: மோதல் கால மனித உரிமை மீறல்கள் தொடர்பான உள்ளக வழிமுறைகளை பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் முழுமையாக நிராகரித்துள்ளனர். எனவே, சுயாதீன சர்வதேச வழக்கறிஞர்கள், சர்வதேச தடயவியல் நிபுணத்துவம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்புடன் கூடிய சர்வதேச பங்கேற்பு குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
செம்மணி மனிதப் புதைகுழி: செம்மணி-சித்துப்பாத்தி பகுதியில் 582 மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அறிக்கை தொடர்பிலும், சர்வதேச தடயவியல் உதவியைப் பெறுவது குறித்தும் UNHRC இல் அரசாங்கம் என்ன தெரிவிப்பையளித்துள்ளது?
காணி விடுவிப்பு: 250 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுவது நடைமுறையில் உண்மைக்குப் புறம்பானது. ராணுவம், தொல்பொருள், வனவிலங்கு மற்றும் மகாவலி அதிகாரசபை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் குறித்து சர்வதேசத்திற்கு வழங்கப்பட்ட உண்மைத் தகவல்கள் எவை?
பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA): PTA ஐ முழுமையாக நீக்குவது மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான சர்வதேச வாக்குறுதி என்ன? தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலம் PTA வை விடப் பாரதூரமானது எனக் சுட்டிக்காட்டினார்.
அதிகாரப்பகிர்வு & மாகாண சபை: மாகாண சபைத் தேர்தல் குறித்த குழுக்களில் காலம் இழுத்தடிக்கும் செயற்பாடுகளே இடம்பெறுகின்றன. புதிய அரசியலமைப்பு மற்றும் அதிகாரப் பகிர்வுக்கான தெளிவான காலவரையறையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
அரசாங்கம் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் மந்தகதியிலேயே செயற்படுவதாகக் குறிப்பிட்ட சாணக்கியன், பிள்ளையான் கைது, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணைத் துரிதப்படுத்துதல் போன்ற நேர்மறையான நகர்வுகளைத் தாம் வரவேற்பதாகவும், ஊழலற்ற ஆட்சிக்கான நல்ல நகர்வுகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


