இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புக்கான தொழில் சந்தை

திருகோணமலை மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கு தொழில் மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட தொழில் சந்தை நேற்று (08) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

தொழில் அமைச்சு, மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும் சிறுவர் நிதியம் ஆகியவற்றின் அனுசரணையுடன், திருகோணமலை மாவட்ட தொழில் நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இத்தொழில் சந்தையில், இராணுவம், கடற்படை, விமானப்படை உள்ளிட்ட முப்படைகள், முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் பயிற்சி நிலையங்கள் பங்கேற்றன.

காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில், தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்த பெருமளவான இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு துறைகளில் காணப்படும் தொழில் வாய்ப்புகள், தொழில் பயிற்சிகள், தகைமைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் தொடர்பில் பங்கேற்ற நிறுவனங்களினால் இளைஞர், யுவதிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும், தங்களது கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகளுக்கு ஏற்ப பொருத்தமான தொழில் வாய்ப்புகள் மற்றும் பயிற்சி வாய்ப்புகளை தெரிவுசெய்வதற்கான சந்தர்ப்பமும் இளைஞர், யுவதிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

இத்தொழில் சந்தையானது மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ள இளைஞர், யுவதிகளுக்கு தொழில் சந்தை மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகளை நேரடியாக அணுகுவதற்கான பயனுள்ள தளமாக அமைந்தது.