வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலை மாற்றும் நடவடிக்கைகள் தொடர்கின்றன: நெதர்லாந்து தூதுவரிடம் சாணக்கியன் MP சுட்டிக்காட்டு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலை திட்டமிட்டு மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக, இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் HE Wiebe de Boer அவர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவரைச் சந்தித்த சாணக்கியன், வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல், காணி மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினார்.

சந்திப்பின் முக்கிய அம்சங்கள்:

மயிலத்தமடு–மாதவனை நில அபகரிப்பு: தமிழ் மக்களின் பாரம்பரிய மேய்ச்சல் தரைப் பகுதிகளான மயிலத்தமடு மற்றும் மாதவனை போன்ற பகுதிகளை அபகரித்து, பெரும்பான்மை இனக் குடியேற்றங்களை உருவாக்குவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு ஆபத்து: தமிழ் மக்கள் அரசியல் தீர்வை வலியுறுத்தி வரும் சூழலில், இத்தகைய குடியேற்றங்களால் எதிர்காலத்தில் மாகாண சபைகள் உள்ளிட்ட எந்தவொரு அரசியல் கட்டமைப்பிலும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவமும் அரசியல் வலிமையும் பெருமளவில் பலவீனமடையும்.

மக்கள் தொகை விகிதாசாரக் குறைப்பு: புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும், நில அபகரிப்பு மூலம் தமிழ் மக்களின் மக்கள் தொகை விகிதாசாரம் குறைக்கப்பட்டால், அதனால் தமிழ் மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் கிடைக்காது.

காணி உரிமைச் சிக்கல்கள்: மட்டக்களப்பு உட்பட வடக்கு-கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் விடுவிக்கப்படாமை, மகாவலி விரிவாக்கம், தொல்பொருள் திணைக்களம், வனவள மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களங்களின் எல்லை நிர்ணயங்களால் மக்களின் வாழ்வாதாரம் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றது.

தமிழ் கட்சிகளின் அரசியல் ஒத்துழைப்பு: தமிழ் கட்சிகளுக்கு இடையே அண்மையில் உருவாகியுள்ள அரசியல் கூட்டிணைப்பு, ஆறு தமிழ்க் கட்சிகளின் கூட்டு நடவடிக்கைகள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஆறு நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் குறித்தும் தூதுவரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

தமிழ் மக்களின் அரசியல் உரிமை, காணி உரிமை மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பு ஆகிய அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்றும், இதில் சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான கண்காணிப்பும் தலையீடும் அவசியம் என்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தினார்.