வாஸ் கூஞ்ஞ) 24.09.2026
ஒரு நாட்டின் சர்வதேச நெறிமுறைகளை பின்பற்ற மாட்டோம் என்ற அரசாங்கம் சர்வதேச வலிந்துபோன ஆட்கள் தினத்தை ஏன் நடத்துகின்றது? அவர்களின் சட்டத்திட்டங்கள் எமக்குத் தேவைப்படாது என்றவர்கள் ஏன் இதைக் கொண்டாட வேண்டும் என சிவில் சமூக குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர் யாழ் பகுதியைச் சேர்ந்த கம்சிக்கா ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.
வலிந்து காணாமலாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தை காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் யாழ்ப்பாணத்தில் கொண்டாடுகின்றது.
இத்தினத்தை முன்னிட்டு வடக்கில் உள்ள யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து திங்கள் கிழமை (24.08) மாலை மன்னாரில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது
இச்சந்திப்பில் செவ்வாய்கிழமை 25.08.2026 அன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் மற்றும் அரச கட்டமைப்புகள் முன்னெடுக்கும் தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் தற்போதைய நிலை எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாகவும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் நோக்கில் இவ்வூடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இச்சந்திப்பின்போது யாழ்ப்பாணம்- புங்குடுதீவு- கிளிநொச்சி மற்றும் மன்னார் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக சிவில் சமூக குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர் யாழ் பகுதியைச் சேர்ந்த கம்சிக்கா ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்
காணாமல்போன உறவுகளை தேடுவதற்காக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தை கொண்டாடுகின்றது.
ஒரு நாட்டின் சர்வதேச நெறிமுறைகளை பின்பற்ற மாட்டோம் என்ற அரசாங்கம் சர்வதேச வலிந்துபோன ஆட்கள் தினத்தை ஏன் நடத்துகின்றது? அவர்களின் சட்டத்திட்டங்கள் எமக்குத் தேவைப்படாது என்றவர்கள் ஏன் இதைக் கொண்டாட வேண்டும்.
சர்வதேசத்திற்கு நாங்கள் இவர்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுத்து விட்டோம் இங்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கப்பட்டு விட்டது என்று வெளிப்படுத்தும் நோக்குடன் சம்பிரதாய முறைப்படி இதைக் கொண்டாடுகின்றோம் என்பதற்காகவே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதை கொண்டாடுவதற்கு இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை ஒவ்வொரு வருடத்திலாவது விடுவித்திருக்க வேண்டும். இவர்களை விடுப்பிப்பதற்காக போராடிக் கொண்டிருக்கும் அம்மாமாருக்கு அவர்களின் பிள்ளைகளை திருப்பிக் கொடுத்திருக்க வேண்டும்
ஆனால் இதை ஒன்றும் செய்யாமல் கண் துடைப்புக்காக இந்த நிகழ்வை செய்கின்றார்கள் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம். இந்த ஓஎன்பியானது எமது மக்களிடையே ஒரு தோல்வி கண்ட ஒரு அலுவலகமாகவே இருக்கின்றது. வலிந்து காணாமல் போனவர்களுக்கு ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று கொடுப்பனவுகளை வழங்கி பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரத்தெண்டிக்கின்றது.
ஆனால் எங்கள் உறவுகள் கேட்பது இந்த நஷ்டஈடுகளை அல்ல. மாறாக எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள் என்றும் அல்லது எங்கள் பிள்ளைகளை கொன்று விட்டோம் என்று சர்வதேசத்திடம் ஒத்துக் கொள்ளுங்கள்.
அதைவிடுத்து பிரச்சனையை மூடி மறைக்கப் பார்க்கின்றீர்கள். அம்மாமாரின் போராட்டங்களோடு இது முடியும் பிரச்சனை அல்ல. ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிவில் சமூகங்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே எப்பொழுது யாரால் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்ற தரவுகளை கொண்டதாக புத்தங்களாக கிளிநொச்சி வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் சிவில் சமூகங்களால் உருவாக்கி வைத்துள்ளனர்.
இந்த புத்தகங்களில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு தரவுகளும் இவர்களின் உறவுகளின் மன வேதனை. இவ்வாறு இருக்க நீங்கள் நஷ்டஈடு கொடுக்கின்றீர்கள். இது தொடர்பான தினத்தை கொண்டர்டுகின்றீர்கள். எங்களுக்கு நஷ்டஈடு வேண்டாம். மாறாக காணாமல் ஆக்கப்பட்வர்களுக்கு என்ன நடந்தது என்ற பதிலே அவசியமானது. நாங்கள் கோருகின்ற வெளிநாட்டு பொறிமுறைகளும் அதற்கான தனியான நீதிமன்றமும் சர்வதேச கண்காணிப்புடன் நடவடிக்கைகளையே கோரி நிற்கின்றோம்.
இதைவிடுத்து சர்வதேச தின கொண்டாடத்தை நாங்கள் எற்றுக்கொள்ளவில்லை. இந்த நிகழ்வை கொண்டாடும் அரசாங்கம் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துங்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுபவர்களின் தரவுகளை தாருங்கள் அப்பொழுதுதான் இந்த சர்வதேச தினம் அர்த்தமுள்ளதாக அமையும் என இவ்வாறு தெரிவித்தார்.


