எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் சேவையாற்றும் பாரம்பரிய சுதேச வைத்தியர்களுடனான கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (21) நடைபெற்றது.
கிழக்கு மாகாண சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் செயலாளர் எச். ஈ. எம். டபிள்யூ. ஜீ. திசாநாயக்க மற்றும் கிழக்கு மாகாண சுதேச வைத்தியத் திணைக்கள ஆணையாளர் எம். ஏ. நபீல் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் சேவையாற்றும் பாரம்பரிய சுதேச வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அதிகாரிகளிடம் பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
பல தலைமுறைகளாக மாவட்டத்தில் பாரம்பரிய முறையில் சேவையாற்றி வரும் சுதேச வைத்தியர்களை பதிவு செய்வதில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத பாரம்பரிய வைத்தியர்கள் பின்பற்ற வேண்டிய சட்டங்கள், ஒழுக்க விதிகள் மற்றும் வைத்தியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான விழிப்புணர்வை திருமதி வனித்தா அனஸ் ரீன் வழங்கினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த சுதேச வைத்திய அமைச்சின் செயலாளர், இப்பிரதேசத்தில் சுதேச வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான தகவல்களை எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறு தெரிவித்ததுடன், அவற்றை சுதேச வைத்தியப் பணிப்பாளர் நாயகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.
இச்செயலமர்வில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றது.
எமது நாட்டில் நாளாந்தம் மூவர் புற்றுநோயால் உயிரிழப்பதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், பாரம்பரிய வைத்தியர்கள் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, நோயாளர்களை உரிய முறையில் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைப்பதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இச்செயலமர்வில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் உள்ளிட்ட துறைசார் நிபுணர்கள் மற்றும் பாரம்பரிய சுதேச வைத்தியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


