உன்னிச்சை – வவுணத்தீவு அபிவிருத்தி திட்டம்: காணி விடுவிப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் இரா.சாணக்கியன் எம்.பி வலியுறுத்தல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை – வவுணத்தீவு பகுதியில் மண்முனை மேற்கு பிரதேச சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு சுற்றாடல் அமைச்சரிடம் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய அவர், குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்த முக்கிய அம்சங்கள்:

அபிவிருத்தி முன்மொழிவு: உன்னிச்சை – வவுணத்தீவு பிரதேச மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு மண்முனை மேற்கு பிரதேச சபையினால் புதிய அபிவிருத்தி முன்மொழிவு ஒன்று தயாரிக்கப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

காணி விடுவிப்பில் தாமதம்: இத்திட்டத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான காணிகளை விடுவிப்பதில் வனஜீவராசிகள் திணைக்களமும் வனவளத் திணைக்களமும் தேவையற்ற தாமதங்களை ஏற்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

தெளிவான வழிகாட்டல் கோரிக்கை: காணி விடுவிப்புக்காக பிரதேச சபையினால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து வனவள அமைச்சச்சு தெளிவான வழிகாட்டல்களை வழங்கினால், அவற்றை விரைவாக பூர்த்தி செய்ய முடியும் என சாணக்கியன் எம்.பி தெரிவித்தார்.

அமைச்சரின் பதில்: இதற்குப் பதிலளித்துப் பேசிய சுற்றாடல் துறை அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி, தெரிவிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் ஆராய்ந்து தேவையான நேர்மறையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

மக்களின் அத்தியாவசியத் தேவைகளை மையமாகக் கொண்டு கொண்டுவரப்படும் இதுபோன்ற அபிவிருத்தித் திட்டங்கள் நிர்வாகத் தாமதங்களால் முடங்கிவிடக் கூடாது எனவும், சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.