மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மனித – யானை மோதல்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில் காணப்படும் தாமதங்கள் குறித்து, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் சுற்றாடல் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இன்றைய அமர்வின் போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்டத்தில் நிலவும் முக்கிய அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புச் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக பின்வரும் முக்கிய கோரிக்கைகளையும் கேள்விகளையும் சுற்றாடல் அமைச்சரிடம் முன்வைத்தார்:
96 கி.மீ யானை வேலித் திட்டம்: மட்டக்களப்பு மாவட்டத்தில் 96 கிலோமீற்றர் தூரத்திற்கு யானை வேலி அமைப்பதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு நன்றி தெரிவித்த உறுப்பினர், நிதி ஒதுக்கப்பட்ட போதிலும் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதம் காரணமாக பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.
போரைத்தீவு பகுதி புறக்கணிப்பு: முன்மொழியப்பட்டுள்ள 96 கிலோமீற்றர் யானை வேலித் திட்டத்தில் போரைத்தீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஒரு கிலோமீற்றர் கூட உள்வாங்கப்படாமைக்கான காரணம் குறித்து அமைச்சரிடம் நேரடியாக கேள்வி எழுப்பப்பட்டது.
புதிய உப அலுவலகங்களின் நிலை: கடந்த ஆண்டு கிழக்கு மாகாண விஜயத்தின் போதும், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் வாக்குறுதியளிக்கப்பட்ட 05 புதிய வனஜீவராசிகள் திணைக்கள உப அலுவலகங்கள் உருவாக்கப்படுமா அல்லது போதுமான உப பிரிவுகள் ஏற்கனவே இருப்பதாகக் கூறி கைவிடப்படுமா என்பது குறித்து தெளிவுபடுத்துமாறு கேட்கப்பட்டது.
ஆளணிப் பற்றாக்குறை மற்றும் வாகன விநியோகம்: வனஜீவராசிகள் திணைக்களத்தில் நிலவும் கடுமையான ஆளணிப் பற்றாக்குறைக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னவென்றும், புதிதாக விநியோகிக்கப்பட்ட வாகனங்களில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எத்தனை வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் வினவப்பட்டது.
மனித – யானை மோதலால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்களில் மட்டக்களப்பு முன்னணியில் உள்ளதால், இப்பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எட்டப்படும் தீர்மானங்கள் வெறும் ஏட்டுச்சுரக்காயாக இல்லாமல், விரைவாக நடைமுறைப்படுத்தப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வர வேண்டும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.


