(வாஸ் கூஞ்ஞ) 18.08.2026
நாம் பிறந்தோம்- வளர்ந்தோம்- வாழ்ந்தோம்- செல்வோம் என்று இல்லாமல் நாம் இறக்கும்போது நாம் ஒரு அர்த்தமுள்ள மனிதனாக இருந்து மரணிக்க வேண்டும் என லண்டனில் தொழில் அதிபராக மற்றும் சமூக சேவையாளருமான சீவரெட்ணம் முறேஷ் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தொழில் அதிபர் மற்றும் சமூக சேவையாளருமான ஜீவரெட்ணம் முறேஷ் அவர்களால் உதவி வழங்கப்பட்டு லண்டனிலிருந்து வருகை தந்து இவர்களுக்கான ஊடகத்துக்கான மடிக்கணினி மற்றும் கையடக்க தொலைபேசி உபகரணங்கள் நாட்டிலுள்ள தமிழ் முஸ்லீம் 90 ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய நிகழ்வு கொழும்பில் வெள்ளவத்தையிலுள்ள மிராஜ் ஹொட்டலில்; ஞாயிற்றுக் கிழமை (16.08). நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாகவும் நன்கொடையாளராகவும் திகழ்ந்த சீவரெட்ணம் முறேஸ் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
வட்டுக்கோட்டையில் பிறந்த நான் சிறுவயதிலேயே தந்தையை இழந்த நிலையில் எனது தாயே மிகவும் கஷ்டத்தின் மத்தியில் வளர்த்தெடுத்தாள். அம்மா தனது சகோதரர்களின் துணையுடன் விவசாயம் செய்து கல்வியிலும் வளர்த்தெடுத்தாள்.
குடும்பக் கஷ்டம் இருந்தபொழுதும் எனது தாய் தன்னை அர்ப்ணித்து எங்களை கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறப்புற வளர்த்தாள். யுத்தக் காலத்தில் என்னைக் காப்பாற்றுவதற்கு எனது சகோதரியும் அவரின் கணவரும் 1994 ஆம் ஆண்டு அவர்களின் செலவில் என்னை லண்டனுக்கு அனுப்பி வைத்தார்கள்.
நான் வெளிநாடு சென்றாலும் எனக்கு தமிழ் மீதும் எமது நாட்டின் மீதும் அளவுக்கடந்த அன்பு இருக்கின்றது. அவ்வாறு நான் கற்றுக் கொண்ட பாடசாலை மீதும் அதிகமான பற்றுக் கொண்டுள்ளேன்.
இப்படியான நிலையில் நான் ஒரு தனி மனிதனாகத்தான் இன்று ஊடகவியலாளர்களாகிய உங்களுக்கு இந்த உதவியைச் செய்கின்றேன். அரசியல் கட்சிகள் அல்லது பொது அமைப்புக்களின் பங்களிப்புடன் நான் இதைச் செய்யவில்லை.
பத்திரிகைகள் சுதந்திரமாக உண்மையான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். உங்களுக்கு இவ்வாறான ஊடகத்திற்கான உபகரணங்களைப் பெற்றுத் தருவதற்கு இந்த தமிழ் ஊடக ஒன்றியம் இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்து இவற்றை பெறுவதற்கான எண்ணத்துடன் இருந்ததாக என்னிடம் தெரிவிக்கப்பட்டபோது அப்பொழுது நான் உணர்ந்தேன் புலம்பெயர்ந்த நாட்டிற்குப் போய் நாங்கள் நல்ல நிலைமையில் இருக்கின்றபொழுது நாம் ஏன் இன்னொரு அரசிடம் கையேந்த வேண்டும் நாங்களே எமது உறவுகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
இன்னொரு நாடு எமக்கு உதவி செய்ய முன்வந்தால் அவர்கள் எம்மிடமிருந்து எதாவது உதவிகளை நாடியே உதவி செய்வார்கள். அதனால் இந்த எண்ணத்தை கைவிடுங்கள் என நான் இவர்களிடம் தெரிவித்திருந்தேன்.
நாம் பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம் செல்வோம் என்று இல்லாமல் நாம் இறக்கும்போது நாம் ஒரு அர்த்தமுள்ள மனிதனாக இருந்து மரணிக்க வேண்டும்.
பத்திரிகை தொழிலைப்பற்றி கூறுவதென்றால் முன்னையக் காலங்களில் ஓலைகளிலேயே எழுதி செய்திகளை பரிமாறினார்கள். 1737 ஆம் ஆண்டு டச்சுக்காரர் இலங்கையை கைப்பற்றியபோது முதலாவது பிரசுரத்தை கொழும்பில் ஆரம்பித்தனர்.
இதன் பின்னர் ஆங்கிலேயர் இலங்கையை கைப்பற்றி 1802 இல் வாராவாரம் இலங்கை வர்த்தமானியை பிரசுரித்தார்கள். இதன் பின்னர் தமிழ் பத்திரிகை உதயதாரகை 1841 இல் ஆரம்பிக்கப்பட்டு 130 வருடங்கள் பிரசுரிக்கப்பட்டது. இதன் பின்னர் சிங்களப் பத்திரிகை காலி மாவட்டத்திலிருந்து 1860 ஆம் ஆண்டிலிருந்து பிரசுரமாகியது.
இலங்கையில் பத்திரிகைகளுக்கு ஒரு மதிப்பு இருக்கின்றது என உணர்ந்து ஆங்கிலேய வர்த்தக குழுவினர் இணைந்து ஒப்சேவர் என்ற பத்திரிகையை ஆர்பித்தனர். அந்த ஒப்சேவர் என்ற பத்திரிகை இன்றும் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இப்படியான நிலையில் இன்று ஊடகவியலாளர்களாகிய நீங்கள் மிக சிரமத்தின் மத்தியில் உங்கள் பணியை முன்னெடுத்து வருகின்றீர்கள். உங்கள் கஷ்டமான பணிகளை நான் உணரக்கூடியதாக இருக்கின்றது.
இப்பொழுது இந்த நவீன உலகத்தில் ஏதோ எல்லாம் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. எதுவாக இருந்தாலும் உண்மையை உண்மையான விடயங்களை எமது எதிர்கால சந்ததினருக்கு கொண்டு செல்லும் பொறுப்பு உங்கள் கைகளிலேயே உள்ளது என இவ்வாறு தெரிவித்தார்.


