ஐரோப்பாவில் தீவிரமடைந்து வரும் புதிய வெப்ப அலையால், வியாழக்கிழமை 13.5 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெப்பநிலை 35°Cஐ தாண்டும் என AFP கணிப்புகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரித்தானியா அதிகம் பாதிக்கப்படவுள்ளன. பிரான்ஸில் பாரிஸ் உட்பட சுமார் 5 கோடி மக்கள், இத்தாலியில் 2.9 கோடி, ஸ்பெயினில் 2.5 கோடி, பிரித்தானியாவில் லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் 2.3 கோடி மக்கள் 35°Cக்கு மேலான வெப்பத்தை எதிர்கொள்ளக்கூடும்.
மேலும், துருக்கியைத் தவிர்த்து ஐரோப்பாவில் சுமார் 34 கோடி மக்கள், அதாவது ஐரோப்பிய மக்கள்தொகையில் ஐந்தில் மூன்று பங்கினர், 30°Cக்கு அதிகமான வெப்பநிலையை சந்திக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகில் மிக வேகமாக வெப்பமடைந்து வரும் கண்டமாக ஐரோப்பா காணப்படும் நிலையில், தொடர்ச்சியான வெப்ப அலைகள் மற்றும் வறட்சி காரணமாக இந்தக் கோடைகாலத்தில் காட்டுத்தீ சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் உலக வெப்பமயமாதலின் தெளிவான அறிகுறியாக தொடர்ச்சியான வெப்ப அலைகள் உள்ளன என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். எதிர்காலத்தில் இத்தகைய வெப்ப அலைகள் மேலும் அடிக்கடி, நீண்ட காலம் மற்றும் தீவிரமாக ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


