( வாஸ் கூஞ்ஞ) 11.08.2026
மடுத் திருத்தளத்திற்கு ஒரு பாரம்பரியம் இருக்கின்றது. இந்த பாரம்பரியங்களை நாம் பாதுகாக்க வேண்டும். அதைவிடுத்து மாற்றங்களை ஏற்படுத்தக் கூடாது. மாற்ற முடியாது. சில சட்டத்திட்டங்கள் இந்த மடுத்திருத்தளத்திற்கு உரித்துடையதாக இருக்கின்றது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (11.08.2026) காலை 11.30 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையின் முன்னிவையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வர்த்தமானி மடு பெருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களின் அத்தியாவசிய தேவைகளின் ஒழுங்கமைப்பு தொடர்பான இரண்டாவது மீளாய்வுக் கூட்டம் மடுத் திருத்தளத்தின் யோசவ்வாஸ் மண்டபத்தில் சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள் பிரதிநிதிகள் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
இதன்போது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை இங்கு உரையாற்றுகையில்
மன்னார் பெருந்நிலப்பரப்பில் பாரம்பரிய வழிபாடு நிகழ்வுகள் முறைகள் வழிபாடுகளுக்கான சட்டத் திட்டங்களுக்கு ஒப்பாக மடு விழாவை சிறந்த முறையில் நடாத்துவதற்கு அரசு உதவி எமக்குத் தேவை. இதற்காகத்தான் நாம் இதை வர்த்தகமானியில் பிரசுரிக்கப்பட்ட பெருவிழா என்கின்றோம்.
அரசு- அரச சார்பற்ற நிறுவனங்கள் மடு பாரம்பரியத்தை கடைப்பிடித்து அதற்கமைய இந்த மடு விழாவுக்கான ஆய்த்தங்களை பல நூற்றாண்டு காலமாக ஒழுங்குப்படுத்தி முன்னெடுத்து வருகின்றோம். இதற்கு உங்களது ஒத்துழைப்புக்கள் எமக்கு மிக மிக அவசியம்.
அதாவது சுகாதாரம்- மருத்துவம்- சாரணர் சேவை- ஜோன் ஆம்புலன்ஸ்- கழிவு அகற்றும் நடவடிக்கை- பாதுகாப்பு நடவடிக்கைகள்- குடிநீர் விநியோகம் மின்சாரம்- உணவு மற்றும் கடைகள்- போக்குவரத்து- சுற்று நீதிமன்றம் உள்ளிட்ட விடையங்கள் போன்றவற்றில் உங்கள் உதவிகள் அவசியம் தேவையானது.
மடுத் திருத்தளத்தின் பாரம்பரியங்களை நாம் பாதுகாக்க வேண்டும். மாற்றங்களை ஏற்படுத்தக் கூடாது. மாற்ற முடியாது. சில சட்டத்திட்டங்கள் இந்த மடுத்திருத்தளத்திற்கு உரித்துடையதாக இருக்கின்றது.
ஆகவே இந்த சட்டத்திட்டங்களை நாங்கள் உங்களுக்கு ஏற்கனவே அறியத் தந்திருக்கின்றோம். இந்த பாரம்பரியத்தை நாம் ஒரே மனப்பான்மையுடன் இவற்றை நாம் யாவரும் ஒருமித்து செயற்படுத்தும்போது நாம் வழிபாடுகளை சிறந்த முறையில் செயற்படுத்த முடியும். இதற்கு நீங்களும் எமக்கு ஒத்துழைப்பாக இருக்க வேண்டும்.
குறிப்பாக இங்கு கழிவு அகற்றுதல் பாதுகாப்பு போன்றவைகள் அவசியமாகிறது. சில கடைகள் இந்த மடுத்திருத்தள பகுதிக்குள் வர முடியாது. ஜஸ் கிறீம் வியாபாரம் என்பது இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலுள்ள சண்டை போன்றதல்ல. ஜஸ் கிறீம் அன்று தொட்டு இங்கு விற்பனை செய்வது தடைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சிறு பிள்ளைகள் விளையாட்டுப் பொருட்கள் ஊது குழல் போன்றவைகள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மடு எல்லைப் பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்டவைகள் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறனவைகளால் இங்கு வழிபாட்டுக்கு தடைகளாக காணப்படுகிறது. இவ்வாறு சில விடயங்களுக்கு இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மடு வீதியில் கடைகள் அமைப்பதை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அங்கு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றது. இப்படியான விடயங்களுக்கு உதவிகள் உங்களிடமிருந்து அதிகமாக தேவையாக இருக்கின்றது.
இதற்கு எதிர்ப்புக்கள் விவாதங்கள் எம்மிடம் இருக்கக் கூடாது. ஆகவே இங்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் பொலிசார் பாதுகாப்பு படைகள் இருக்கின்றீர்கள். எங்களுக்கு தேவையானது இங்கு வருகை தரும் பக்தர்களை ஒன்று சேர்த்து 15ந் திகதி பெருவிழாவை பக்தியாக நிறைவேற்றி மக்கள் தங்கள் உள்ளத்திலுள்ள வேண்டுதலை நல்மனதுடன் அன்னையிடம் சமர்பித்து திருப்தியான முறையில் அவர்கள் திரும்பிச் செல்லும் சூழலை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இதற்கும் உங்கள் உதவிகளை கோரி நிற்கின்றோம். வருடத்துக்கு வருடம் புதிய புதிய பிரச்சனைகள் முன்னெடுக்கப்படுவதை நாம் நோக்கக் கூடியதாக இருக்கின்றது. முன்னையக் காலத்தில் மடு வீதி பண்டிவிரிச்சான்- தம்பனை இவைகளும் மடுத்திருத்தளத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. இங்கு மக்களை நாங்களே குடியேற்றினோம்.
இப்பகுதிக்குள் சாராயம் இறைச்சி கொண்டுவர முடியாது. இப்பகுதிக்குள் தொற்று நோய்கள் உருவாகக் கூடாது என்பதற்காகவே சில கட்டுப்பாடுளை விதித்துள்ளோம். இவைகள் இங்குமட்டுமல்ல மடு எல்லைக்கப்பாலும் இவைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
ஏனென்றால் மடுத்திருப்பதிக்கு மக்கள் வருகை தரும்போது இறை உணர்வு இருக்க வேண்டும். அதைவிடுத்து சந்தைக்கு செல்லும் உணர்வாக இருக்கக் கூடாது. மடு ஆலய வீதியில் சிறுவர்களை பயன்படுத்தி வியாபாரத்தில் ஈடுபடுபவர்களும் உண்டு இவற்றை தடுக்க உங்களால் முடியும். அதற்கேற்ற சட்டமும் உண்டு.
ஆகவே நாளுக்கு நாள் மாறி வருகின்ற விடயங்களால் நாம் மடுவை மாற்றிக்கொள்ள முடியாது. சில குறைபாடுகள் இங்கு காணப்படலாம் இவற்றை நாம் சீர்திருத்துவோம். தற்பொழுது மடு பகுதிக்குள் அல்ல ஆனால் மடு எல்லைக்கு அருகாமையில் ஜஸ் கிறீம் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. ஆகவே இவ்வாறான பிரச்சனைகளுக்கு அரசு சார்பாக உள்ள அரச அதிகாரிகளின் உதவிகள்தான் எமக்கு தேவையென ஆயர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.


