கிழக்கில் அமைதியான முறையில் இடம்பெற்ற உயர்தர பரிட்சை

( வி.ரி. சகாதேவராஜா)
கிழக்கு மாகாணத்தில் அமைதியான முறையில் உயர்தர பரிட்சை நேற்று (10) திங்கட்கிழமை சீரற்ற காலநிலைக்கு மத்தியில் சுமுகமாக ஆரம்பமானது.

2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நேற்றிலிருந்து (10.08.2026) ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இம்முறை பரீட்சைக்காக 264,496 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 107,814 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்கலாக மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கிழக்கில் மாணவர்கள் இறை ஆசிர்வாதம் வேண்டி ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை முன்னெடுத்து பரீட்சை நிலையங்களுக்கு சென்றதை காணமுடிந்தது.

மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பரிட்சை நிலையங்களில் இன்று காலை அமைதியான முறையில் முறையில் பரீட்சைகள் ஆரம்பமாகி நடைபெற்றன.

சீரற்ற காலநிலைக்கு மத்தியில் காட்டு யானை அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாணவர்களுக்காக விசேட பரிட்சை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் 80 பரீட்சை நிலையங்கள் பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரிட்சை எழுதுவோர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது
இதில் 08 இணைப்பு பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதுடன் உயர்தர பரிட்சைக்கு இம்முறை 9809 பாடசாலை மாணவர்கள் பரிட்சைக்கு தோற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.