ஆயித்தியமலை யாத்திரையினை அதிகாலையில் முன்னெடுக்க தடை

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு ஆயித்திமலை சதா சகாய அன்னை திருத்தலத்தின் 72 வது திருவிழா எதிர்வரும் 28.08.2026 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, புரட்டாதி 6.09.2026 ஆம் திகதி திருநாள் கூட்டுத் திருப்பலியுடன் நிறைவு பெற இருக்கின்றது.

இத்திருநாள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையிலே இன்று 04.08.2026 திகதி சார்ல்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, யாத்திரிகர்களின் நலன் கருதி, விசேடமாக யானைகள் நடமாட்டம் இக்காலத்தில் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால், யாத்திரையினை முன்னெடுக்கவுள்ள பக்தர்கள் அதிகாலை 4:30 மணிக்கு முன்னர் தமது யாத்திரையினை ஆரம்பிக்க வேண்டாம் என அரசாங்க அதிபர் மற்றும் பொலிஸ் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் ஏனைய வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் வேண்டுகோளாக முன்வைத்துள்ளனர்.

எனவே யாத்திரியர்கள் இத்தடவை தங்களது யாத்திரையினை காலை 4:30 மணிக்கு முன்னர் ஆரம்பிக்காதவாறு ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு அன்பாகக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இம்முறை திருநாள் காலங்களில் அன்னதானம் போன்ற விடயங்களை வழங்க விரும்புகின்ற பக்தர்கள், திருத்தல நிர்வாகிகளின் அனுமதியுடன் பொது சுகாதார விதிகளுக்கு அமைய அன்னதானத்தை வழங்கவேண்டும் எனவும் இதன் போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தடவை திருத்தல வளாகத்தில் ஒரு பொதுவான கூடாரத்தை அமைத்து, அதிலிருந்து சகல அன்னதானங்களையும் வழங்குவதற்காக தீர்மானம் ஒன்றை மேற்கொண்டிருப்பதனால் அவ்விடத்திற்கு கொண்டுவரப்படும் அன்னதானங்களை பொது சுகாதாரப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பரிசோதித்த பின்னரே அன்னதானங்களை வழங்கலாம் என்பதனையும் கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆயித்திமலை சதா சகாய அன்னை திருத்தலத்தின் பரிபாலகர் அருட்பணி ஜெரிஸ்டன் வின்சன்ட் அடிகளார் தெரிவித்தார்.

மேலும் இதன் போது திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து, சுகாதாரம், தங்குமிட வசதிகள் மற்றும் குடிநீர் போன்ற விடையங்கன் தொடர்பாகவும் துறைசார் அதிகாரிகளுடன் ஆராயப்பட்டு அவற்றை திறம்பட மேற்கொள்வதற்கான முடிவுகளும் எட்டப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் மண்முனை மேற்கு பிரசேத செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம், மண்முனை மேற்கு பிரசேத சபையின் பிரதிநிதிகள், பொலிஸ் உயரதிகாரிகள், திணைக்களங்கள் சார் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்ததுடன், தமது பூரரண ஒத்துழைப்பினை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.