ஐரோப்பா முழுவதும் வேகக்கட்டுப்பாட்டு தீவிர சோதனை

ஆகஸ்ட் 9 வரை ROADPOL நடவடிக்கை – சுவிட்சர்லாந்து ஓட்டுநர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

ஐரோப்பிய போக்குவரத்து காவல்துறை அமைப்பான ROADPOL ஒருங்கிணைப்பில், ஆகஸ்ட் 3 முதல் 9 ஆம் தேதி வரை ஐரோப்பா முழுவதும் “Operation Speed” என்ற பெயரில் சிறப்பு வேகக்கட்டுப்பாட்டு சோதனை முன்னெடுக்கப்படுகிறது.

கோடை விடுமுறை பயணங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கூடுதல் போக்குவரத்து காவல்துறையினரும், தற்காலிக மற்றும் நிரந்தர வேகக் கண்காணிப்பு (Speed Camera) கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

சோதனைகள் பெரும்பாலும் விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகள், பாடசாலைகள், மருத்துவமனைகள், குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் சாலைப் பணிகள் நடைபெறும் இடங்களை மையமாகக் கொண்டு நடத்தப்படுகின்றன.

வேக வரம்பை மீறும் ஓட்டுநர்களுக்கு அபராதம், கடுமையான சந்தர்ப்பங்களில் ஓட்டுநர் உரிமம் (Driving Licence) பறிமுதல் செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

கோடை விடுமுறையை முடித்து சுவிட்சர்லாந்து திரும்பும் ஓட்டுநர்கள் மற்றும் எல்லைப் பகுதிகளுக்கு வாகனங்களில் செல்லும் அனைவரும் வேக வரம்புகளையும் போக்குவரத்து விதிகளையும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Operation Speed என்றால் என்ன?

ROADPOL ஆண்டுதோறும் நடத்தும் இந்த ஒரு வார பாதுகாப்பு நடவடிக்கையின் நோக்கம், அதிக வேகத்தால் ஏற்படும் சாலை விபத்துகளையும் உயிரிழப்புகளையும் குறைப்பதே ஆகும்.

முந்தைய ஆண்டுகளில் இந்த நடவடிக்கையின் போது சாலை உயிரிழப்புகள் சுமார் 25% வரை குறைந்ததாக தெரிவிக்கப்பட்டாலும், சோதனை முடிந்ததும் ஓட்டுநர்கள் மீண்டும் பழைய வேகத்திற்கு திரும்புவதால், அதன் நீண்டகால பலன் குறித்து சில நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.