மத்திய ஆப்பிரிக்காவில் சுவிஸ் புவியியலாளர் கடத்திக் கொலை

சில நாட்களில் இரண்டாவது சுவிஸ் உயிரிழப்பு

பாங்கி | 04.08.2026

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் (Central African Republic) சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த புவியியலாளர் லூகா மஜ்ஜினி (Luca Maggini) மற்றும் உள்ளூர் சுரங்கத் தொழிலாளர் ஒருவர் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்த தாக்குதல் தலைநகர் பாங்கி நகருக்கு வடக்கே, Gbango-Carriere கிராமத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலின் போது மத்திய ஆப்பிரிக்க இராணுவத்தைச் சேர்ந்த ஒரு ஸ்டாப் சார்ஜென்டும் கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த லூகா மஜ்ஜினி, ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ADMOG Gold நிறுவனத்தில் புவியியல் ஆய்வாளராகப் பணியாற்றி, தங்க வளங்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு பல ஆண்டுகளாக ஆயுதக் குழுக்களின் வன்முறை மற்றும் அரசியல் நிலையற்ற சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நாடு, ரஷ்யாவின் வாக்னர் (Wagner) கூலிப்படை முதன்முதலில் செயற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாகும்.

இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பும் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஆயுதத் தாக்குதலில் மற்றொரு சுவிஸ் குடிமகன் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.