( வாஸ் கூஞ்ஞ) 02.08.2026
ஓய்வுநிலை அரசாங்க அதிபர் எஸ்.மரியதாசன் குரூஸ் அவர்கள் தான் மன்னார் அரசாங்க அதிபராக பணியாற்றியபோது 1983 லிருந்து 2009 வரை யுத்தக்கால தனது டையறிலிருந்து நூலாக்கிய புத்தக வெளியீடு மன்னாரில் மிக சிறப்பாக நடைபெற்றது.
மன்னார் வங்காலையை பிறப்பிடமாக் கொண்டவரும் மன்னார் மாவட்டத்தில் அரசாங்க அதிபராகவும் மற்றும் 2000 ஆண்டிலிருந்து வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி திட்டங்களுக்காக திட்டமிடல் பணிப்பாளராகவும் பின்பு திட்டமிடல் பகுதிக்கு பிரதி பிரதம செயலாளராகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடனான ‘நிக்கொட்’ திட்டத்தில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளராகவும் பின்பு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடனான ‘நெக்டெப்’ திட்டப் பணிப்பாளராகவும் வடகிழக்கிற்கு வீட்டுத்திட்டத்திற்கான உதவி பெற வேண்டிருந்தமையால் உலக வங்கி பிரமாணங்களுக்கு அமைவாக ஒரு திட்டவரைபு தயாரிப்பதற்காக பதில் திட்டப்பணிப்பாளராக 2011 ம் ஆண்டு வரை இருந்து செயல்பட்டபோதும் ஆசிய அபிவிருத்தி வங்கியானது இவரது திறமையை கவனத்தில் எடுத்து 2024 நவம்பர் வரை அவரது 77 வயது வரைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியானது இவரை பல திட்டங்களுக்கும் ஆலோசகராக நியமித்திருந்து வடகிழக்கு சமூகத்தின் அபிவிருத்தி பணி செய்த எஸ்.மரியதாசன் குரூஸ் அவர்கள் 1983 லிருந்து 2009 வரை யுத்தக்கால தனது டையறிலிருந்து தான் மன்னார் அரசாங்க அதிபராக பணியாற்றியபோது அனுபவித்த துன்பங்கள் அனுபவங்கள் இவற்றுக்குள்ளும் மக்களுக்கு செய்த பணிகளை புத்தகமாக்கி ‘மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் யுத்தக்கால டையறிலிருந்து 1983-2009’ என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா சனிக்கிழமை (01.08.2026) மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது
மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் குருமுதல்வரும் மன்னார் மாவட்டத்தின் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் ஸ்தாபகருமான அருட்பணி ஏ.சேவியர் குரூஸ் அடிகளாரின் தலைமையில் இப்புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக மன்னார் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்- சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுநிலை அரசாங்க அதிபர்களான வே.விஸ்வலிங்கம்- திருமதி.அ.ஸ்ரான்லி டி மெல் கலந்து கொண்டனர்
இப்புத்தக வெளியீட்டீன் வாழ்த்துரையை ஓய்வுநிலை கணக்காய்வு அத்தியட்சகர் ஏ.லோகநாதனும் நூல் அறிமுகத்தை ஓய்வுநிலை வட மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதனும் நூல் வெளியீட்டுரையை மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி தமிழ் நேசன் அடிகளார் அவர்களும் மற்றும் கருத்துரைகளை மட்டக்களப்பு முன்னாள் பிரதி திட்டப்பணிப்பாளர் எஸ்.சாமித்தம்பி மன்னார் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம்.சபூர்தீன்- திருமலை கரையோர பாதுகாப்புத் திணைக்களம் சார்ந்த எஸ்.தீபராஜ் மற்றும் பலரும் நிகழ்த்தினர்.
முதல் நூலை புத்திக ஆசிரியர் ஓய்வுநிலை அரச அதிபர் எஸ்.எம்.குரூஸிடமிருந்து மன்னார் மாவட்ட அரசாங்க க.கனகேஸ்வரன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வுக்கு வடக்கு கிழக்கு பகுதியில் இவரின் கீழ் பணியாற்றிய பலரும் வருகை தந்திருந்தனர். ஓய்வுநிலை நிர்வாக கிராம அலுவலகர். எஸ்.ஏ.ராதா பெர்னாண்டோ இந்த நிகழ்ச்சியை தொகுத்து நடத்தினார்.


