சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாநிலத்தில் உள்ள பிரியென்ஸ் (Brienz) நகரில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஆயுத அச்சுறுத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வங்கிக்குள் நுழைந்த ஆயுதம் ஏந்திய நபர், இரண்டு வங்கி ஊழியர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக உள்ளே தங்கவைத்ததாக பெர்ன் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.55 மணியளவில், பிரியென்ஸின் பிரதான வீதியில் அமைந்துள்ள வங்கியில் ஆயுதம் ஏந்திய ஒருவர் மிரட்டல் விடுத்து, ஊழியர்களை வங்கியின் கதவுகளை மூடுமாறு கட்டாயப்படுத்தியதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஆயுதப் போலீஸ், தீயணைப்புப் படை மற்றும் ஆம்புலன்ஸ் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தன. பாதுகாப்பு நடவடிக்கையாக வங்கியைச் சுற்றியுள்ள பகுதி முழுமையாக முடக்கப்பட்டு, பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
சில நேரத்திற்குப் பின்னர், இரண்டு வங்கி ஊழியர்களும் பாதுகாப்பாக வங்கியிலிருந்து வெளியேறினர். பின்னர், சந்தேகநபர் தனது ஆயுதத்தை வங்கிக்குள் தரையில் வைத்துவிட்டு சரணடையும் நோக்கில் வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கைப்பற்றப்பட்ட ஆயுதம் பாதுகாப்பாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்தின் காரணம் மற்றும் பின்னணி குறித்து Oberland அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்தின் மேற்பார்வையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள், அந்தப் பகுதியில் பல காவல்துறை வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததையும், ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததையும் தெரிவித்துள்ளனர். சில நேரம் அந்தப் பகுதியிலுள்ள சாலைகளும், ரயில் நிலையத்திற்குச் செல்லும் பாதையும் மூடப்பட்டிருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.


