ஹஸ்பர் ஏ ஹலீம்
இலங்கையின் 10 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 28 உள்ளூராட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற மூன்றாவது கட்ட அறிவுப் பரிமாற்ற மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி இந்தியாவில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இந்தியாவின் ஹைதராபாத்தில் அமைந்துள்ள தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவகத்தில் (NIRDPR) ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி, 2026 ஜூலை 20 முதல் 29 ஆம் திகதி வரை தெலங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடைபெற்றது.
உள்ளூராட்சி பிரதிநிதிகளின் அறிவு மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், நிலைத்த நிலை அபிவிருத்தி இலக்குகளை (SDGs) உள்ளூர்மயமாக்குதல், அதிகாரப் பரவலாக்கப்பட்ட திட்டமிடல், கிராம பஞ்சாயத்துகளின் வருவாய் அதிகரிப்பு, பொருளாதார கணக்கெடுப்பு முறைகள், ஆரம்ப சுகாதாரம் மற்றும் கல்வி தொடர்பான அமர்வுகள் நடத்தப்பட்டன.
பயிற்சியின் ஒரு பகுதியாக, தெலங்கானாவில் உள்ள பழம் மற்றும் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், கூட்டுறவு வங்கிகள், பெண்கள் வழிநடத்தும் பால் உற்பத்தி நிலையங்கள், ஸ்த்ரீ நிதி (Stree Nidhi) மற்றும் ஊரக வறுமை ஒழிப்பு சங்கம் (SERP) ஆகியவற்றிற்கும் களப்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன், தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்திற்கும் விஜயம் மேற்கொண்ட பிரதிநிதிகள், தோட்டத் தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள், ஆரம்ப சுகாதார மற்றும் கல்வி நிறுவனங்கள், பெண்கள் வழிநடத்தும் கிராமிய வாழ்வாதார முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னுதாரணங்களை பார்வையிட்டனர். மேலும், நீலகிரி மாவட்ட ஆட்சியருடன் கலந்துரையாடியதுடன், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் பிற உள்ளூர் பொருளாதார முயற்சிகளையும் பார்வையிட்டனர்.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது அறிவிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட திறன் மேம்பாட்டு கட்டமைப்பின் கீழ் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் இலங்கைத் தொழில்முறை நிபுணர்களுக்காக ஆண்டுதோறும் 700 தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


