மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நீண்டகால தேவைகள் தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நான் முன்வைத்த முக்கிய விடயங்கள்
இன்று (31.07.2026) நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மாவட்ட மக்களின் அன்றாட வாழ்வாதாரம், நீண்டகால அபிவிருத்தி மற்றும் தீர்வு காணப்படாமல் நீடித்து வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரினதும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளினதும் கவனத்துக்கு கொண்டு சென்ற போது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சருமான கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் தலைமையிலும், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்ட மக்களின் நலனுடன் நேரடியாக தொடர்புடைய பல முக்கிய விடயங்களை இக்கூட்டத்தில் நான் விரிவாக எடுத்துரைத்தேன்.
அவற்றில் முதன்மையானதாக, பல ஆண்டுகளாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் முந்தனையாறு குடிநீர் மற்றும் நீர்வள அபிவிருத்தித் திட்டம் குறித்து விரிவாக விளக்கமளித்தேன். 2017–2018 காலப்பகுதியில் பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் நிறுவனம் (AFD) ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டிருந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக AFD நிறுவனம் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தாலும், இலங்கை அரசாங்கம் இதுவரை அதற்கான நிதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை என்பதை கூட்டத்தில் சுட்டிக்காட்டினேன். அந்த ஒப்பந்தம் எப்போது கைச்சாத்திடப்படும் என்பதையும், அது நிறைவேற்றப்பட்டவுடன் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நீண்டகால குடிநீர் தேவைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் இந்தத் திட்டத்திற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினேன். குடிநீர் வழங்கலைத் தாண்டி, விவசாயம், நீர்ப்பாசனம், வெள்ளக் கட்டுப்பாடு, தொழில்துறை மற்றும் சுற்றுலா அபிவிருத்திக்கும் இத்திட்டம் மிக முக்கியமானதாக இருப்பதையும் நினைவூட்டினேன்.
அதேபோன்று, கடந்த மே மாதம் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தபோது நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து, அவற்றிற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதாக உறுதியளித்திருந்தார். எனினும், அவற்றில் பல திட்டங்கள் இதுவரை நடை முறைப்படுத்தப்படாதிருப்பதை சுட்டிக்காட்டி, ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழிகள் தாமதமின்றி செயற்படுத்தப்பட வேண்டும் என்றும், மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் அறிவிப்புகளாக இல்லாமல் நடைமுறைத் திட்டங்களாக மாற வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.
மாவட்டத்தின் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல முக்கிய பாலங்கள் மற்றும் வீதிகள் தொடர்பாகவும் நான் கவனம் செலுத்தினேன். பட்டிருப்பு பாலம், மண்டூர்–குறுமண்வெளி பாலம், அம்பிளாந்துறை–குருக்கள்மடம் பாலம், சந்திவெளி–திகிலிவெட்டை பாலம், வெல்லாவெளி–திவுலானை வீதி மற்றும் அம்பிளாந்துறை–வில்லுக்குளம் வீதி ஆகிய திட்டங்களுக்கான சாத்தியவள ஆய்வு அறிக்கைகளை விரைவாகத் தயாரித்து, அபிவிருத்திப் பணிகளை தாமதமின்றி ஆரம்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தினேன். இத்திட்டங்கள் பல ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்து வரும் அடிப்படை உட்கட்டமைப்பு தேவைகளாகும் என்பதையும் சுட்டிக்காட்டினேன்.
உறுகாமம் மீனவர் சங்கம் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் இறங்குதுறை பிரச்சினையையும் கூட்டத்தில் முன்வைத்தேன். இதுதொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அனைத்து தரப்பினரின் கருத்துகளும் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில், மீனவர்களின் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, அனைத்து மீனவர்களும் உறுகாமம் குளத்தில் அமைந்துள்ள இறங்குதுறையில் தங்களது தோணிகளை நிறுத்தி பயன்படுத்த வேண்டும் என்ற முன்மொழிவு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பெரிய கல்லாறு பொது விளையாட்டு மைதானத்தை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் நான் கவனம் செலுத்தினேன். இளைஞர்களின் விளையாட்டு முன்னேற்றத்திற்கும், எதிர்கால மாவட்ட விளையாட்டு அபிவிருத்திக்கும் இம்மைதானம் முக்கிய பங்காற்றும் என்பதால், முதற்கட்டமாக சம்பந்தப்பட்ட அனைத்து திணைக்களங்களின் பங்களிப்புடன் மைதானத்தை சுத்தப்படுத்தி, அதன் பின்னர் விரிவாக்கப் பணிகளுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
இதற்கு மேலாக, மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துடன் நேரடியாக தொடர்புடைய பல முக்கிய பிரச்சினைகளையும் கூட்டத்தில் முன்வைத்தேன். மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை, யானை–மனித மோதலால் மக்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள், களுவாஞ்சிக்குடி ஐஸ் தொழிற்சாலை தொடர்பான பிரச்சினைகள், விவசாயிகளின் நெல் கொள்வனவு, நெல்லுக்கான உத்தரவாதக் கொள்விலை, விவசாயிகளின் நலன் மற்றும் மாவட்ட மக்களின் நீண்டகால அபிவிருத்தித் தேவைகள் ஆகிய அனைத்தும் விரிவாக ஆராயப்பட்டன. இவ்விடயங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் அரச திணைக்களங்கள் இனியும் தாமதமின்றி செயற்பட்டு, மக்களுக்கு நடைமுறைப்படியான தீர்வுகளை வழங்க வேண்டும் என நான் வலியுறுத்தினேன்.
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயம், மீன்பிடி, போக்குவரத்து, கல்வி, விளையாட்டு, வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகிய அனைத்துத் துறைகளிலும் நீண்டகால மற்றும் நிலையான தீர்வுகள் உருவாக வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். மக்கள் என்னிடம் ஒப்படைத்துள்ள பொறுப்பை முழுமையாக உணர்ந்து, மாவட்டத்தின் ஒவ்வொரு பிரச்சினையையும் தொடர்ந்து பாராளுமன்றத்திலும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும், சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் அதிகாரிகளுடனான கலந்துரையாடல்களிலும் உறுதியாக முன்வைத்து, அவற்றுக்கான நிரந்தரத் தீர்வுகளைப் பெற்றுத்தர நான் தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகிப்பேன்.


