நாளை காலை கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை திறப்பு!

(வி.ரி.சகாதேவராஜா)

யாழ்ப்பாணம் செல்வச்சந்நதி ஆலயத்திலிருந்து கடந்த மே மாதம் 23ஆம் திகதி கதிர்காமத்திற்கான பாதயாத்திரையை ஆரம்பித்த ஜெயாவேல்சாமி தலைமையிலான பாதயாத்திரைக்குழுவினர் 48நாட்களின்பின்னர் நேற்று(8) புதன்கிழமை, கிழக்கின் தென்கோடியிலுள்ள உகந்தமலை முருகனாலயத்தை சென்றடைந்துள்ளனர்.

நேற்றுக்காலை குழுவினர் சன்னியாசிமலையடிவாரத்திலிருந்து 48வது நாள் யாத்திரையை ஆரம்பித்து காலை 9.45 மணியளவில் உகந்தமலையை சென்றடைந்தனர். கடந்த 48தினங்கள் விடாமல் தொடர்ந்து நடந்துவந்த அவர்கள் இன்றையதினம் அங்கு ஓய்வுபெறுவார்கள்.

இவர்களுடன் வந்த சுப்பிரமணியன் என்ற நாய் பாணமையில் இருந்து தரை மார்க்கமாக நேற்று முன்தினம் (7) செவ்வாய்க்கிழமை கதிர்காமத்தை சென்றடைந்தது.
குழுவில் 145 அடியார்கள் கலந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாளை காலை காட்டுப்பாதை திறப்பு!

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை நாளை 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 6மணியளவில் உகந்தமலை முருகனாலய அதிகாலை விசேட பூஜையின் பின்னர் அம்பாறை மற்றும் மொனராகலை அரசாங்க அதிபர்கள் முன்னிலையில் திறந்து வைக்கப்படும்.

முதல் நாளில் சுமார் 8 ஆயிரம் பேர் பயணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்முறை வழமைக்குமாறாக காட்டுப்பாதையால் பயணிப்போருக்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
உகந்தமலை முருகனாயத்திலிருந்து குமுக்கனூடாக யால வனப்பகுதியூடாக பாதயாத்திரீகள் செல்லும்போது யாரும் உணவுப்பார்சல்களையோ பிளாஸ்ரிக் தண்ணீர்ப்போத்தல்களையோ வழங்கமுடியாது. இது கட்டாயம் அமுல்படுத்தப்படும்.
கடந்தகால அனுபவங்களினடிப்படையில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்ரிக் போத்தல்கள் உணவுக்கழிவுகள் என்பன காட்டு விலங்குகளுக்கு ஆபத்தாக அமைகின்றன.
எனவே இவற்றை வழங்கமுடியாது.இதனை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பொலிசார் கண்காணிப்பார்கள்.