உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பான விசாரணையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, தனது கைப்பேசி மற்றும் மடிக்கணினியின் கடவுச்சொற்களை குற்றப் புலனாய்வு துறைக்கு (CID) வழங்க வேண்டும் என்று கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டார்.
சந்தேகநபர் சார்பில் முன்வைக்கப்பட்ட ஏழு கோரிக்கைகளையும் நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை தற்போது முன்னெடுத்து வரும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஷானி அபேசேகர தலைமையிலான விசாரணைக் குழுவை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.
23 பக்கங்களைக் கொண்ட நீதிமன்ற உத்தரவை வாசித்த நீதவான், அடுத்த விசாரணை நாளில் அனைத்து சந்தேகநபர்களும் காணொளி வழியாக நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
பாதுகாப்பு அமைச்சரால் 2026 பெப்ரவரி 28 அன்று பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவு, மே 27 அன்று நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் சுரேஷ் சாலேவை CID காவலில் வைத்து தொடர்ந்து விசாரிப்பது அவசியம் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு மிகவும் சிக்கலானது என்பதால், சட்டமா அதிபர் நேரடியாக விசாரணையை மேற்பார்வை செய்து வருகிறார் என்றும் கூறப்பட்டது. விசாரணை அதிகாரிகள் தம்மை நன்றாக நடத்துகின்றனர் என்று சுரேஷ் சாலே முன்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்ததால், விசாரணைக் குழுவை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் நீதவான் குறிப்பிட்டார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவை மறுபரிசீலனை செய்ய நீதவான் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபருக்கு வெளியிலிருந்து புத்தகங்கள், செய்தித்தாள்கள் மற்றும் இதழ்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. CID நூலகத்தில் உள்ள வாசிப்பு வசதிகளை அவர் பயன்படுத்தலாம் என்றும், வெளியிலிருந்து பொருட்கள் கொண்டுவரப்படுவதால் தேவையற்ற தகவல் பரிமாற்றம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சுரேஷ் சாலே தற்கொலைக்கு முயற்சிக்கக்கூடும் என்ற தகவல்கள் இருப்பதால், அவருக்கு பேனா வழங்குவது பாதுகாப்பானதல்ல எனக் கருதி அந்தக் கோரிக்கையும் நீதிமன்றம் நிராகரித்தது.
அதேபோல், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 127ஆம் பிரிவின் கீழ் அறிக்கை வழங்க அனுமதி கோரியிருந்த கோரிக்கையும் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற காரணத்தால் நிராகரிக்கப்பட்டது.
அரசுத் தரப்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ், சுரேஷ் சாலே திறமையான “ஹேக்கர்” என்றும், அவர் கைது செய்யப்பட்டபோது மீட்கப்பட்ட கைப்பேசியும் மடிக்கணினியும் முதலில் அவரது மகளுக்குச் சொந்தமானவை என்று கூறப்பட்டாலும், விசாரணையில் அவை அவருடையவை என்பதும் உறுதியாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அந்த இரண்டு சாதனங்களும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருப்பதால், அவற்றை ஆய்வு செய்ய கடவுச்சொற்கள் அவசியம் என்றும் அவர் நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.
வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்ட பிறகு சுரேஷ் சாலே உண்ணாவிரதத்தைத் தொடங்கியதாகவும், தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் மூக்கின் வழியாக குழாய் செலுத்தி உணவு மற்றும் வைட்டமின்கள் வழங்கப்படுவதாகவும் அரசுத் தரப்பு தெரிவித்தது.
முன்னாள் அமைச்சர்கள் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு பேர் ஊடகங்களில் வெளியிட்ட கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பாக இருக்கலாம் என்றும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசுத் தரப்பு தெரிவித்தது.
இதற்காக பத்து ஊடக நிறுவனங்களிடமிருந்து தொகுக்கப்படாத காணொளி பதிவுகளைப் பெற CID-க்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சுரேஷ் சாலேவைச் சந்தித்த பின்னர் உதய கம்மன்பில வெளியிட்ட கருத்துகள் மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும், சாட்சிகளுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார். இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் CID-க்கு உத்தரவிட்டது.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, கடவுச்சொற்களை வழங்குமாறு உத்தரவிடுவது சட்டவிரோதமானது என்றும், மௌனமாக இருப்பதற்கான அரசியலமைப்புச் உரிமை மற்றும் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என்ற சட்டக் கொள்கை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டார்.
எனினும், அனைத்து தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், சுரேஷ் சாலே தனது கைப்பேசி மற்றும் மடிக்கணினியின் கடவுச்சொற்களை CID-க்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கின் மற்றைய சந்தேகநபர்களும் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி காணொளி மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும், அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்ற அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


