மட்டக்களப்பு மாவட்டத்தில் கரையோர பாதுகாப்பு தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரங்களை பாதுகாத்து நிலையான முறையில் அபிவிருத்தி செய்வது தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (30) நடைபெற்றது.

மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகளைத் தடுப்பதற்கும், குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதற்குமான நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

கரையோர வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில், சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் விசேட செயலணி ஒன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டது.

கரையோரங்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அல்லது சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் இச்செயலணி செயற்படும் என தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் பல இயற்கை தோணாக்கள் மற்றும் கரையோரப் பகுதிகள் சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அவற்றைப் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த செயற்பாடுகளின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உயர் அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள் மற்றும் அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.