யாழ்- கதிர்காம பாதயாத்திரீகர்களின் உருக்கமான வேண்டுகோள்!

( வி.ரி. சகாதேவராஜா)

கதிர்காம
கொடியேற்றத்துக்கு முன் ஐந்து நாட்களுக்கு முன் காட்டுப் பாதை திறப்பதாக கூறப்படுகின்றது. இது போதாது; 55 நாட்களாக 60-88 வயது வரை முதியவர்கள் வருகின்ற இலங்கையின் மிக நீண்ட 815 கிலோமீட்டர் கொண்ட இந்த பாதயாத்திரை கொடியேற்றத்தை மையமாக வைத்தே காலாகாலமாக இடம்பெறுகிறது.
எனவே கோடியேற்றம் பார்ப்பதானால் குறைந்தது ஆறு நாட்களாவது முன்னதாக திறக்க வேண்டும்.சம்பந்தப்பட்ட மொனராகலை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்கள் இதனை மாற்றித் தருமாறு பணிவாக வேண்டுகிறோம்.

இவ்வாறு யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கி கடந்த 35 நாட்களாக பயணித்து வரும் பாதயாத்திரை குழுவினர் மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து சம்பந்தப்பட்டவர்களிடம் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்கள்

பாதயாத்திரை குழு தலைவர் ஜெயா வேல்சாமி என அழைக்கப்படும் காரைநகரைச் சேர்ந்த சிங்கராசா ஜெயராசா கூறுகையில் ..

நான் கடந்த 12 தடவைகளாக கதிர்காமம் சென்று வருகின்றேன் . இம்முறை 128 அடியார்களோடு வருகின்றேன். 55 நாட்கள் 815 கிலோமீட்டர் நாங்கள் பயணித்து அங்கு செல்வது கொடியேற்றத்தை காணவே .
முன்னைய காலங்களிலே 10 நாட்கள் பதியேற வேண்டும் என்று சொல்வார்கள். பின்பு எட்டு நாட்கள். ஆனால் இம்முறை 5 நாட்கள் என்கிறார்கள். அது போதாது. வே
சரி குறைந்தது ஆறு நாட்களாவது மாற்றி தர வேண்டும் என்றார்.

நாகர்கோவிலைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை தவசிலிங்கம் கூறுகையில்..
காட்டுப் பாதை திறப்பது தொடர்பாக இரண்டு கூட்டங்கள் நடந்ததாகவும் அதில் இந்த பாதை திறப்பு நாட்கள் கூட்டப்படவேண்டும் என்று யாருமே பேசவில்லை என்று அறிந்து கவலையடைந்தேன்.நாங்கள் கொடியேற்றத்தை காணவே பயணிக்கின்றோம் வயது முதிர்ந்தவர்கள் அதிகம் இருக்கின்றார்கள். குறைந்தது ஆறு நாட்கள் தேவைப்படும்.எனவேஆறு நாட்களாவது மாற்றி தர வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகின்றோம் .

காரைதீவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபர் என்.இராசையா கூறுகையில்..
சன்னதியில் இருந்து வயது வந்தவர்களுடன் 12 வது வருடமாக பயணிக்கின்றேன். நாங்கள் அங்கு செல்வது கொடியேற்றத்தை காணவே .எம்மோடு வருகின்ற 65 முதல் 88 வயது வரையான முதியவர்களுக்கு 5 நாட்களில் செல்ல முடியாது. கொடியேற்றத்தை பார்க்க முடியாமல் போகலாம் .எனவே இதனை 6 நாட்களாக மாற்றி தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் .

மட்டக்களப்பை சேர்ந்த சாந்தி அம்மா பேசுகையில் ..
நான் 33 வருடங்களாக கதிர்காமம் யாத்திரை சென்று வருகின்றேன். வரலாற்றில் இவ்வாறு ஐந்து நாட்கள் ஒரு போதும் இருந்ததுஇல்லை. இம்முறை தான் 5 நாள் புதினம் காட்டுகிறார்கள் . கூட்டத்திற்கு சென்றவர்கள் இதை சொன்னார்களா? எங்களுக்கு ஆறு நாட்கள் முன்னதாக வேண்டும் என்றார்.

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த வரதராஜா வரன் சாமி கூறுகையில் …

காட்டுப் பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயணிப்பார்கள். அவர்களில் ஓரிருவர் மூன்று அல்லது நான்கு நாட்களில் செல்கின்றார்கள் என்பதற்காக மற்றவர்களை கணக்கெடுக்காதது பிழை.
எங்களுக்கு அங்கு எந்த பாதுகாப்பும் இல்லை . எமக்கு முருகன் தான் பாதுகாப்பு. உணவை நாங்கள் எங்களை கவனித்துக் கொள்வோம் எனவே இந்த ஐந்து நாட்களை கூட்டி குறைந்தது எட்டு நாட்களாவது மாற்றித் தரவேண்டும் . என்றார்.

காரைதீவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிமன்ற பதிவாளர் என்.லோகராஜு கூறுகையில்..
வாழ்க்கையில் முதல் முறையாக சந்நிதியில் இருந்து பயணிக்கிறேன். தமிழ் மக்கள் 90 வீதம் பயணிக்கும் பாதயாத்திரை மற்றும் காட்டுப் பாதை திறப்பு தொடர்பாக வருடாந்தம் இன்னொரு சமூகம் தீர்மானிக்கும் நிலைமை நிலவுகிறது. நான்குபேர் நான்கு நாளில் செல்கின்றார்கள் என்பதற்காக மீதி 96 பேருக்கும் 5 நாள் எனத் திணிப்பது ஒருதலைப் பட்சமானது. இதனை ஏற்கமுடியாது. “விருப்பம் என்றால் வாருங்கள் இல்லாவிட்டால் போங்கள்” என்று கூறுவது போன்று உள்ளது. பாரம்பரிய கதிர்காமம் பாதயாத்திரை புனிதமானது. மத சடங்குகளுக்கு மதிப்பளியுங்கள். எமது பிரதிநிதிகள் எமக்காக குரல் கொடுங்கள். இம்முறை 5 நாளை விட்டுக் கொடுத்தால் இனிமேல் இதுதான் தொடரும் என்பதை மறந்து விடாதீர்கள். என்றார்.