கல்லடி புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் கல்லடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (21) திகதி கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது.

கல்லடி – டச்பார் பங்கின் சிற்றாலயமான கல்லடி புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றமானது கடந்த 17.06.2026 திகதி மாலை 5.30 மணிக்கு பங்குத்தந்தை இயேசு சபைத்துறவி அருட்பணி யூட் டிலக்சன் அடிகளார் தலைமையில் ஆரம்பமானதைத் தொடர்ந்து செபமாலையும், அதனைத் தொடர்ந்து முதலாவது நவநாள் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

முதலாவது நவநாள் திருப்பலியானது அருட்தந்தை எஸ்.றொஷான் அடிகளார் தலைமையில் இடம்பெற்றதுடன்,
நவநாட் காலங்களில் தினமும் மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலையும் அதனைத் தொடர்ந்து திருப்பலியும் இடம்பெற்றதுடன், கடந்த (20) திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு புனிதரின் திருச்சுருப பவணியும், நற்கருணை ஆராதனையும் ஆசீரும் இடம்பெற்றது.

பெருவிழா கூட்டுத் திருப்பலி இன்று (21) திகதி காலை 6.30 மணிக்கு திரு இருதயநாதன் ஆலய பங்குத்தந்தை அருட்பணி சீ.வீ.அன்னதாஸ் அடிகளார் தலைமையில் மேலும் பல அருட்பணியாளர்கள் இணைந்து பெருவிழா கூட்டுத் திருப்பலியினை ஒப்புக்கொடுத்திருந்தனர்.

குறித்த பெருவிழா கூட்டு திருப்பலியில் மூத்த இயேசு சபைத்துறவி ஜோன் யோசப்மேரி அடிகளார் உள்ளிட்ட அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பொது நிலையினர், பங்குமக்கள், அயல்பங்கு மக்கள், ஆலய நிருவாகிகள் என அதிகளவிலானோர் திருவிழா திருப்பலியில் கலந்து கொண்டு புனிதரின் ஆசீரை பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.