மட்டக்களப்பில் எல்-நினோ நிலைமை தொடர்பான மாவட்ட மட்ட தயார்படுத்துவதற்கான கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் எல்-நினோ (El Niño) காலநிலை தாக்கங்களை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட மட்ட தயார்படுத்துவதற்கான கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஏ.எம்.எஸ். சியாத் ஏற்பாட்டில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (18) நடைபெற்றது.

எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகரிப்பதால் உருவாகும் இயற்கை காலநிலை நிகழ்வாகும்.

இந் நிகழ்வினால் உலகின் பல பகுதிகளில் வறட்சி, வெள்ளப்பெருக்கு, வெப்ப அலைகள் மற்றும் கடுமையான வானிலை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதினால் இப் பாதிப்புக்களை குறைத்துக்கொள்வதற்கான தயார்படுத்தல் கலந்துரையாடல் இடம் பெற்றது.

மேலும் எல்-நினோவால் ஏற்படக்கூடிய வறட்சி, நீர்வளப் பற்றாக்குறை மற்றும் விவசாய பாதிப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் நிகழ்நிலையினுடாக சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எஸ் சஞ்ஜிவி பிரசாத் அவர்கள் இந்தோ–இலங்கை புவியியல் பிராந்தியத்தில் எல்-நினோவின் காரணங்கள் மற்றும் அதன் விளைவுகள் தொடர்பான விளக்கங்களை வழங்கினார்.

மேலும், ஜப்பானின் சுகுபா நகரில் அமைந்துள்ள International Centre for Water Hazard and Risk Management (ICHARM) நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் மொஹமட் ரிஸ்மி அவர்கள் எல்-நினோ காலநிலை மாற்றத்துக்கான முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை தெளிவு படுத்தினார்.

நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவன பிரதிகள், உயர் அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் என பலர் கலந்து கொண்டனர்.