டிக்வா புயலினால் பாதிக்கப்பட்ட வவுணதீவு சிறு, நடுத்தர வியாபாரிகளுக்கான நிதியுதவிகள் வழங்கி வைப்பு

டிக்வா புயலால் பாதிக்கப்பட்ட, மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள், வணிக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான நிதியுதவிக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் மண்முனை மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு கலந்துகொண்டு, தெரிவு செய்யப்பட்ட 20 பயனாளிகளுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் இப்பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், அரசு அதிகாரிகள், மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.